Showing posts with label கட்டிடம். Show all posts
Showing posts with label கட்டிடம். Show all posts

Wednesday, July 17, 2013

GFRG demo building

முதலில் கீழே உள்ள சுட்டியில் ஜிஎஃப் ஆர் சி பயன்படுத்தி கட்டப்பட்ட பில்டிங்கற கீழே உள்ல வீடியோவை பார்த்தேன். ஆர்வம் அதிகமாகி இதை எப்படியும் நேரில் போய் பார்த்து எப்பிடி இவ்வளவு விலை குறைவாக கட்டுறாங்கன்னு பாக்கணும்னு நினைச்சேன். நீங்களும் முதல்ல வீடியோவை பார்த்துருங்க


அந்த ஆர்வத்தில் ஐஐடியில் கட்ட பட்டுள்ள ஜிஎஃப் ஆர் சி மாடல் பில்டிங்கிற்கு நேரில் சென்று பார்வையிட்டு வந்தேன். காஸ்ட் குறித்தும் மேல் விபரங்களை அங்க யாரிடமும் கேட்டறிய முடியவில்லை. கட்டிடத்தை பார்த்து விட்டு வந்தேன் கட்டத்தில் மாட்ட பட்டுள்ள தகவல் பலகையில் கீழ்கண்ட முக்கியமான விஷயங்கள் தெளிவாக குறிக்க பட்டிருக்கு ஆனா இதையே உட்டாலக்கடி பண்ணிய ஊடகங்கள் 1981 ச. அடி கட்டிடம் 6.5 இலட்ச ரூபாயில்னு கிளப்பி விட்ட எதிர்பார்ப்போடு கிளம்பிய எங்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அதில் குறிப்பிடபட்டுள்ள மிக முக்கியமான அந்த செய்திகள்



1.Total Buildup Area : 1981 sq.ft construction Cost @ 23 Lakhs

2.GFRG Panels sponsored by Rashtriya Chemicals and Fertilizers Limited (RCF) , Govt of India

3. Housed four typical flats: two for EWS (268 sq.ft carpet area) and two for LIG (497 sq ft)



அதாவது கட்டுமான செலவு 1981 ச.அடியில் நாலு வீடுகள் கட்டியிருக்கிறார்கள். இதற்கான கட்டுமான செலவு 23 இலட்சம் ஆனது எனவும் குறிப்பிட்டு இருக்கிறார்கள். ஜிஎஃப் ஆர் சி பேன் ஸ்பான்ஸர் பண்ண பட்டுள்ளது எனவும் குறித்திருக்கிறார்கள். அதற்கான காஸ்ட்டும் சேர்த்துதான் இந்த 23 இலட்சமா எனவும் தெரியவில்லை. குறிப்புகளின் படி பார்த்தால் ஸ்பான்ஸர் என குறிப்பிட்டிருப்பதால் அந்த பேனல் விலையை சேர்க்காமல்தான் 23 இலட்சம் ஆகியிருக்கும் என்ற யூகத்திற்கு வரவேண்டியிருக்கிறது. 

நல்ல முயற்சிதான் இது செங்கல் சுவர் மற்றும் பூச்சுமானத்திற்கு மட்டும் இந்த பேனல் மாற்றாக இருக்கும். மற்ற படி கட்டுமான செலவில் மிகபெரிய்ய மாற்றத்தை ஏற்படுத்தாது. கட்டுமான காலத்தை குறைக்கவும், பூச்சு, செங்கற்கட்டுக்கு ஆகும் மணல் பயன்பாட்டை குறைக்கவும் இது உதவும்.
 

Tuesday, May 7, 2013

சென்னை மெட்ரோ - கட்டுமான தொழில் நுட்ப அறிமுகம்

மெட்ரோ  வேலை நடைபெறுகிறதுன்னு அங்கங்க பேரிகேஷன் போர்டை சென்னை முழுதும் பார்த்திருப்பீங்க. அந்த பேரிகேஷன் போர்டுக்குள்ள என்னதான் பண்ணுறாங்கங்கறதை தெரிந்து கொள்ள ஓரு சின்ன அறிமுகமாக இந்த கட்டுரையை எழுத ஆரம்பித்திருக்கிறேன்.

45 கிலோ மீட்டருக்கு அமையவிருக்க்கும் இந்த மெட்ரோ இரயிலின் கட்டுமான காலம் நான்கு வருடம் என கணக்கிட்டிருக்கிறார்கள். மிகநெருக்கமாக மற்றும் ட்ராபிக் அடர்த்தி மிகுந்த சென்னை போன்ற ஏரியாக்களில் நான்கு வருட கட்டுமான காலம் என்பது சாத்தியமில்லாதது. அதனால் ஊருக்கு வெளியே வளரும் நகரங்களில் மட்டுமே இது போன்ற திட்டம் சாத்தியமானது என்கிற நிலையை மாற்றிய நவீன கட்டிட தொழில் நுட்பத்தை பற்றிய ஒரு பார்வையை முழுவதுமாக முடியாவிட்டாலும் ஒரளவிற்காவது பதிவு செய்யலாம் என்ற எண்ணமே இந்த கட்டுரை.

சென்னை மெட்ரோ - குறிப்புகள்

தற்போது கட்டப்பட்டு வரும் சென்னை மெட்ரோ இரண்டு வழித்தடங்களாக தீர்மானித்து முதல் வழித்தடத்தில், வண்ணாரப் பேட்டையிலிருந்து சைதாப்பேட்டை வரை 14.3 கி.மீ் தூரம் சுரங்கப்பாதையாகவும் மீதமுள்ள பகுதி உயர்த்தப்பட்ட பாதையாகவும் இருக்கும்.  இரண்டாவது வழித்தடத்தில் சென்னை சென்ட்ரலில் இருந்து அண்ணா நகர் இரண்டாவது நிழற்சாலை வரை 9.7 கி.மீ தூரம் சுரங்கப்பாதையாகவும் மீதமுள்ள பகுதி உயர்த்தப்பட்ட பாதையாகவும் அமைக்கப்படவுள்ளன.

மெட்ரோ இரயில் வழித்தடம் தொலைவு  வழித்தட விவரங்கள்:
மெட்ரோ இரயில் வழித்தடம்
தொலைவு
வழித்தட விவரங்கள்:
வழித்தடம் - 1

வண்ணாரப்பேட்டையிலிருந்து விமான நிலையம் வரை
23.1 கி.மீ.
வண்ணாரப் பேட்டை -பிராட்வே (பிரகாசம் சாலை) - சென்னை சென்ட்ரல்-ரிப்பன் மாளிகை - கூவம் கரை ஒரமாக - அரசினர் தோட்டம்-தாராப்பூர் கட்டிடம்-ஸ்பென்ஸர்ஸ்-ஜெமினி-அண்ணா சாலை-சைதாப்பேட்டை - கிண்டி-சென்னை விமான நிலையம்.
வழித்தடம் - 2

சென்னை சென்ட்ரலில் இருந்து புனித தோமையர் மலை வரை
22 கி.மீ.
சென்னை சென்ட்ரல் - .வே.ரா பெரியார் சாலை வழியாக வேப்பேரி - கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி - அமைந்தக்கரை - ஷெனாய் நகர் - அண்ணாநகர் கிழக்கு - அண்ணாநகர் இரண்டாவது நிழற்சாலை - திருமங்கலம் - கோயம்பேடு பேருந்து நிலையம் - ஜவகர்லால் நேரு சாலை வழியாக - வடபழனி - அசோக்நகர் - சிட்கோ - ஆலந்தூர் - புனித தோமையர் மலை.
மொத்தம்
45.1 கி.மீ.






அலைன்மெண்ட் மேப்


கட்டுமான தொழில்நுட்பம்

     இது போன்ற நெருக்கடியான இடங்களில் கட்டுமானத்தை கட்ட மிக முக்கியமாக கடைபிடிக்க வேண்டிய விதி, reduced cast in situ, increase precast structure என்பதுதான். அதாவது  தேனாம்பேட்டையில் நடக்குற வேலைக்கு திருநீர்மலையில் இடம் பிடிக்குறதுங்கற பாணியில் அதே இடத்தில் வைத்து செய்ய வேண்டிய வேலைகளை குறைத்து வேறு இடத்தில் கட்டமைப்பு செய்து உதிரிபாகங்களாக கொண்டு வந்து பொருத்தும் வேலையை மட்டும் செய்தால் ஆன் சைட் நெருக்கடி காலத்தை குறைக்கலாம். இப்போது நடைபெற்று கொண்டிருக்கும் மெட்ரோ பணியிலும் ஐம்பது சதத்திற்கும் மேல் ப்ரீகாஸ்ட் முறையில் திட்டமிடபட்டு ஆன்சைட் நெருக்கடியை வெகுவாக குறைத்திருக்கிறார்கள்.

     சென்னை மெட்ரோவில் இரண்டு வகையான தடம் & ஸ்டேஷன் அமைக்க இருக்கிறார்கள்
1.   உயர்த்தபட்ட தடம்  (Elevated Track)
2.   சுரங்க தடம்        (Underground Tunnel)

1.   உயர்த்தபட்ட தடம் (Elevated Track)

கட்டுமானத்தின் முக்கியமான பாகங்களை கீழே குறிப்பிட்டிருகிறேன்.

·         பைல் & பைல் கேப்
·         பியர்
·         பியர் கேப்
·         செக்மெண்ட்ஸ்
·         ஹேண்ட்ரெய்ல்
இவற்றில் பியர் கேப் வரையில் ஆன்சைட் முறையிலும் செக்மெண்ட்ஸ் ஆப்சைட்டில் வேறு ஏதாவது ஒரு இடத்தில் ப்ரிக்காஸ்ட்டாக உருவாக்கப்பட்டு கட்டுமான இடத்தில் லாஞ்சிங் கர்டர் துணைகொண்டு இணைக்க்க படுகிறது. இதன் மிக முக்கியமான நன்மை என்னவென்றால் பில்லர் அமைக்கும் இடத்தை மட்டும் வேலை செய்ய உகந்தவாறு அகலமாக எடுத்து கொண்டு  மற்ற இடத்தில் மிககுறைந்த அளவில் ஏற்கனவே இருக்கும் வாகன பாதைக்கு அதிக பாதிப்பு ஏற்படுத்தாது அமைக்கலாம்.

ட்ராக்கில் ஓவ்வொரு 25 – 30 மீட்டருக்கு ஒரு பில்லர் அமைத்து அதன் சப்போர்ட்டில் ட்ராக் செக்மெண்ட்ஸை அமைக்கிறார்கள். இதில் நவீனகட்டுமான யுக்தியான ப்ரீகாஸ்ட் முறையில் நகரின் நெரிசல் குறைந்த திருநீர்மலை போன்ற பகுதிகளில் காஸ்டிங்க் யார்டு அமைக்கப்பட்டு கோயம்பேடு போன்ற நெரிசல் மிகுந்த பகுதிகளில் இணைக்கபடுகிறது. இந்த இன்ஸ்டலேஷன் லாஞ்சிங் கர்டர் எனும் இயந்திரத்தின் துணை கொண்டு நடைபெறுகிறது


லாஞ்சிங் கர்டர் முறையில் இணைக்கப்படும் ட்ராக் ஆனது இரண்டு ட்ராக்கினை கொண்டுள்ளது. இரண்டு இரயில்கள் ஓரே நேரத்தில் செல்லும்படியான அமைப்பில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பில்லர் வரை மட்டுமே காஸ்ட் இன் சிட் முறையில் செய்யப்படுவதால் ஸ்டேஷன் தவிர்த்து இதற்கு தேவைப்படும் அகலம் 10 மீட்டர் மட்டுமே.

கோயம்பேட்டிலிருந்து வடபழனி, அசோக்நகர் & கிண்டி வழியாகச்செல்லும் வழித்தடம் முழுவதும் எலிவேட்டட் ட்ராக் ஆகவே வடிவமைக்க பட்டுள்ளது. ட்ராக் செக்மெண்ட்ஸ் 1.2 மீட்டர் நீளமாக பிரித்து பிரித்து காஸ்டிங்க் யார்டில் உருவாக்கபடுகிறது. காஸ்டிங்க் யார்டில் செய்வதால் ஏற்படும் வசதி என்னவென்றால் தரமான காங்கிரீட்டை போடுவதோடு தரச்சான்றின் போது ஏதேனும் குறைபாடு காணப்பட்டால் ஆன்சைட் முறையை போல் ரெட்டிபிகேஷன் முறைக்கு மாறாமல் அந்த பாகத்தையே முழுவதும் நிராகரித்து.. மீண்டும் தரமான புதிய பாகத்தை உருவாக்கி பயன்படுத்த முடியும்.

அண்டர் க்ரவுண்ட் டனல் (சுரங்க பாதை)





மிக நெரிசல் மிகுந்த அண்ணா சாலை போன்ற ஏரியாக்களில் ஸ்டேஷன் அமைய இருக்கும் இடங்களில் மட்டும் தோண்டி டனல் போரிங் மெஷின் (TBM) எனும் இயந்திரத்தின் உதவி கொண்டு மிகப்பெரிய கட்டிடங்கள் நிறைந்த பகுதியில் பூமிக்கடியில் 40 அடிக்கு கீழே இந்த சுரங்கபாதை அமைக்கப்படுகிறது. பேர்ரிகேஷன் போர்டு போடாத இடங்களில் கீழே என்ன வேலை நடைபெறுகிறது என தெரியாமலேயே பயணித்து கொண்டிருக்கிறோம்.
ஸ்டேஷன் அமைய இருக்கும் நேருபார்க், மே டே பார்க போன்ற இடங்களில் முதலில் TBM மெஷினை இறக்க லாஞ்சிங் சாஃப்ட் அமைக்கப்பட்டு வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மெஷின்களை தோண்டுவதற்கு தயாரான நிலையில் வைக்கிறார்கள். இது சுரங்கப்பாதைக்காக தோண்டிகொண்டே செல்ல செல்ல காஸ்டிங் யார்டில் இருந்து உற்பத்தி செய்து கொண்டுவரப்பட்ட டனல் ரிங்கை உடனேயே பொருத்தி சுற்றியுள்ள மண் டனலை பாதிக்காமல் பாதுகாக்கிறது.
டனல் தோண்டப்படும் ட்ராக்களின் அருகில் உள்ள கட்டிடங்களை முன்ஆய்வு செய்து பில்டிங் கன்டிஷன் சர்வே ரிப்போர்ட்டில் படங்களுடன் சமர்பித்து விடுகின்றனர். பிறகு மெட்ரோ பணியினால் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் அதனை சரிசெய்து தரும் பொறுப்பும் அந்ததந்த ஒப்பந்தகாரரையே சேரும்.
ட்வின் டனலாக இரண்டு ட்ராக்குகளை தோண்டி பராமரிப்பு பணிக்காக இரண்டையும் இணைக்கு முன்னூறு மீட்டருக்கு ஓன்று எனும் கணக்கில் க்ராஸ் பேசேஜ் எனும் அமைப்பை ஏற்படுத்துகிறார்கள். இது தவிர இது முக்கியமான வடிவமைப்பாக TVS & ECS சிஸ்டத்தை கருதுகிறார்கள்.
TVS (Tunnel Ventilation System) – டனலிள் தேவைப்படும் வெண்டிலேஷனை வழங்கவும் மேலும் அதை கட்டுப்படுத்தவும் பயன்படுத்தபடுகிறது.
ECS (Enviornmet Control System) – டனலிள் தேவைப்படும் வெப்பநிலையை கட்டுபடுத்த பயன்படுத்த படுகிறது. ஏதேனும் தீவிபத்து போன்ற அசம்பாவிதம் நடந்தால் நிலைமையை உடனடியாக கட்டுக்குள் கொண்டுவரவும் இந்த அமைப்பு பயன்படுகிறது.



அண்டர்க்ரவுண்ட் மெட்ரோ ஸ்டேஷன்

அண்டர்க்ரவுண்ட் ஸ்டேஷனை பொறுத்த வரையில் டாப் டவுன் எனும் முறையில் கட்ட திட்டமிடுகிறார்கள். அதாவது முதலில் டயாப்ரம் வால் எனும் சுவர்களை சுற்றி நிருவி விட்டு மேலிருந்து தோண்ட ஆரம்பித்து முதல் லெவல் ஸ்லாப் வரை தோண்டுகிறார்கள். பிறகு அந்த ரூப் ஸ்லாபை கட்டி முடித்து.. ஆங்காங்கு விடப்படும் கட் அவுட் எனும் ஓப்பனிங்க் வழியாக எக்ஸவேட்டர் இயந்திரத்தை இறக்கி மேலும் கீழே அடுத்த லெவல் ஸ்லாப் வரை தோண்டுகிறார்கள். பின அந்த ஸ்லாபை கான்க்ரீட் போட்ட பிறகு அதற்க்கும் கீழ் தோண்ட ஆரம்பிக்கிறார்கள். கீழே உள்ள படத்தில் விளக்கப்பட்டுள்ளன.



டெல்லி மற்றும் பெங்களூரு மெட்ரோவின் வேலை முடிவடைந்த படங்கள் இணையத்தில் எடுத்தவைகள் உங்கள் பார்வைக்கு



தகவல் திரட்டப்பட்ட தளசுட்டிகள்


மேலும் சில மெட்ரோ தொடர்புடைய பதிவுகள்


Monday, November 1, 2010

ஆர்க்கிடெக்ட் அதிசயங்கள் - தஞ்சை பெரிய கோவில்

தஞ்சை பெரிய கோவில்

இலங்கையில் பெரிய புத்தர் சிலையை பார்த்துவிட்டு தஞ்சைக்கு வந்த இராஜராஜ சோழன் அதே மாதிரி சிவனுக்கு கோயில் கட்ட ஆசைப்பட்டார். விளைவு தஞ்சை பெரிய கோவில். இக்கட்டிடத்திற்கு 14 நிலைகள் உண்டு. 216 அடி உயரமுடையது. ஒவ்வொரு கோபுர மூலையிலும் நந்திகள் அமைக்கப்பெற்றுள்ளது என்பதெல்லாம் எல்லோருக்கும் தெரிந்ததுதான்.

ஆனால், எல்லோரும் நினைத்து கொண்டிருப்பது போல் இராஜராஜ சோழனின் தலைமை ஆர்க்கிடெக்ட் பெருந்தச்சர் குஞ்சரமல்லர் என்றால் தவறு. அவருக்கும் கீழே இருந்த நித்த வினோத பெருந்தச்சன் எனப்படும் குணவன் எனப்படும் சிற்பியே தலைமை ஆர்கிடெக்டாக பணிபுரிந்து வந்தார். ( கோயிலின் உச்சியில் இடம் பெற்றிருக்கும் அந்த கல் விமானத்தை எந்தவித கிரேனும் இல்லாம உச்சியில் ஏற்றிய டெக்னிக் நித்த வினோத பெருந்தச்சனுடையது) அவருக்கு உதவியாக இருந்த மற்றுமொரு ஆர்க்கிடெக்ட் இலத்திச்சடையண் என்பவராகும். மேலும் இவர்களுக்கு டிசைனராக பணிபுரிந்தது சீராளன் என்னும் ஓவியர்.

வெறும் செங்கற்கள் நிலைபெறாது என புரிந்து வைத்திருந்த இராஜராஜ சோழன் நித்த வினோத பெருந்தச்சனின் யோசனைப்படி நாரத்தை எனப்படும் இடத்திலிருந்து (தற்போதைய திருவல்லம் அருகே ) கருங்கற்களைக் கொண்டு கற்றளி எழுப்பினார். கோபுரத்தின் மொத்த உயரம், மொத்த நிலைகள் நீள அகலம், மூல லிங்கத்தின் உயரம் என மொத்தமும் பேசி திட்டமிடப்பட்டு விவாதித்து பிறகு கட்டிட வேலைகள் துவக்கப்பட்டன. கோபுரத்தின் உச்சியில் வைப்பதற்காக கொண்டு செல்லப்பட்ட வழியும் நந்தி உள்ளிட்ட துணைச் சிற்பங்களை கொண்டு செல்லப் பட்ட வழியும், முறையும் இப்பொழுதும் கூட ஆச்சர்யமாகத்தான் உள்ளது.


மேல்நிலைகளுக்கும், உச்சிக்கும் பொருட்களைக் கொண்டு செல்ல சாரம் கட்டுவதா? அல்லது உச்சியில் இராட்டினம் அமைத்து கருங்கற்களை கயிற்றால் கட்டி இழுப்பதா? அல்லது  கோபுர உச்சியில் இருந்து தரையின் வரையில் ஒரே நேரான  சரிவான பாதை அமைப்பதா? என குழப்ப நிலை வேறு. அவ்வாறு நீளமான சரிவான பாதை அமைக்கும் போது அந்த பாதையின் நீளம் ஒரு கிராமத்தையும் (ஏறக்குறைய 6 கி. மீ) தாண்டி நிற்கும் என அளந்து பார்த்து அத்திட்டத்தையும் கைவிட்டனர். அவ்வளவு உயரத்திற்கும் நீளத்திற்கும் மண் பாதை போட முடியாது என மாற்று வழி யோசித்தனர். பின்புதான், கோயிலின் கோபுரத்தைச் சுற்றியே கோபுரத்தின் உச்சி வரை வளைவு பாதை போடுவதென தீர்மானித்தார்கள். இந்த ஐடியா நித்த வினோத பெருந்தச்சனுடையதாகும். கோயில் கோபுரம் எழ எழ அதனை சுற்றியே மண் கொட்டப்பட்டு, மண்பாதை அமைக்கப் பட்டது. அவ்வழியே கோபுரத்திற்கு தேவையான துணைச்சிற்பங்கள், கோபுர மூலையில் வைப்பதற்கான நந்திகள் மற்றும் விமானங்கள் போன்றவை யானைகள் மூலம் எடுத்து செல்லப்பட்டன.  அந்த மண்பாதையின் அகலம் 16 அடியாகும்.

கருங்கற்கள் தூண்கள் பெரும்பாலும் ஒரே கல்லில் செய்வதென தீர்மானிக்கப்பட்டது. உத்திர கட்டைகள் மட்டும் சாந்தினால் இணைக்கப்பட்டது. சாந்து கலவை செய்வதற்கு புற்று மணல், சாம்பிராணி மற்றும் ஏகப்பட்ட மூலிகைப் பொருட்களை கொண்டு தயாரிக்கப்பட்டது. சோழர்களின் ஆட்சிக்காலம் முடிந்து வெகு காலம் வரை எத்தனையோ மன்னர்கள் வந்து தஞ்சையை சூறையாடிய பிறகும் இந்த பிரகதீஸ்வரர் ஆலயம் மட்டுமே அவர்களையும் காலத்தையும் வென்று நின்று கொண்டிருக்கிறது.

இந்த கோவில் கட்டுவதற்கான தங்கம், வெள்ளி மற்றும் செப்பு பொருட்களுக்காக மேலை சாளுக்கியம் (இப்போதைய கர்நாடகா)  என்கிற நாட்டோடு  இராஜராஜ சோழன் போர் புரிய வேண்டியதாயிற்று. அப்போரில் துங்கபத்திரா நதிக்கரையில் ஏழு லட்டம் படை வீரர்களுடன் இராஜராஜ சோழன் அணி வகுத்திருந்த போது முதல் வீரனாக ஆற்றில் இறங்கி போர் புரியச் சென்றது சாட்சாத் இராஜராஜ சோழன்தான்.


ஹைலைட்ஸ்

  • கோபுரத்தை சுற்றி மண்பாதை  அமைப்பதற்காக கொட்டப்பட்ட மண்ணின் அளவு 3 லட்சம் கூடையாகும். (ஒரு கூடை = 22 கிலோ). தேவைப்பட்ட மண் ஆறுகள், ஏரிகள், குளங்களிலிருந்து எடுக்கப் பட்டன. தேவைக்கான மண்ணும் கிடைத்தது. அதே சமயம் நீர் நிலையங்களும் ஆழமாகின.

  • கோபுர உச்சியில் வைக்கப்பட்டிருக்கும் கல் (விமானம்) ஒரே கல்லினால் ஆனது அல்ல. கீழேயே இரண்டு துண்டுகளாக செய்து மேலே கொண்டு செல்லப்பட்டு மறுபடியும் ஒட்ட வைக்கப்பட்டது.  இந்த விமானத்தின் மொத்த எடை 81 டன்களாகும்.

  • கோபுரம்  14 நிலைகள் உடையது.  கோபுரத்தின் மொத்த உயரம் 216 அடி.

  •  ஒவ்வொரு கோபுர மூலையிலும் நந்திகள் அமைக்கப்பெற்றுள்ளது. கோபுர மூலைகளில் வைக்கப்பட்டுள்ள  நந்தி 6.5 x  5.5 அடி அளவுகள் உடையது.

  • இதன் வாசலில் இருக்கும் நந்தியின் எடை 27 டன்களாகும்.

  • கோபுர கீழ்தளத்தின் மொத்த சுற்றளவில் 14ல் ஒரு பங்கானது மேல் நிலையில் உள்ள கோபுர தளத்தின் உட்பக்க சுற்றளவும் சமமாகும்.

  • இந்த கோவில் மண்டபத்தில் கர்ணம் எனப்படும்  நடனச்சிற்பங்களுக்கு மாடல் யார் தெரியுமா? இராஜராஜ சோழனின் மனைவி பஞ்சவன் மாதேவிதான்

- நன்றி  திரு பா. சுப்ரமணியம் & பில்டர்ஸ் லைன்

- பா. சுப்ரமணியம் எழுதி   ”பில்டர்ஸ் லைன்” பத்திரிக்கையில் வெளிவந்த ’ஆர்க்கிடெக்ட் அதியசங்கள்’ எனும் தொடரில் இருந்து டைப்பியது

Monday, August 16, 2010

வீடு கட்ட உதவும் இலவச மென்பொருள் - SWEET HOME 3D

நீங்க புதிதாக வீடு கட்ட ப்ளான் பண்ணிகொண்டிருந்தாலோ அல்லது இது சம்பந்தமான தொழிலில் இருந்தாலோ உங்களுக்கு இந்த SWEET HOME 3D மென்பொருள் மிக உபயோகமாக இருக்கும். இது இலவசமாக கிடைக்கும் இண்ட்டீரியர் சாப்ட்வேர். மிக எளிதில் மனதில் தோன்றுவதை வரைபடமாக வரைய உதவும் அதே நேரத்தில் கட்டிடத்தின் முப்பரிமாண தோற்றத்தையும் நமக்கு தரும். மேலும் கதவு ஜன்னல், போன்றவற்றை பில்ட் இன்னாகவே வைத்திருப்பதும் இந்த மென்பொருளின் சிறப்பாக சொல்லலாம். கட்டில் சேர் போன்ற இண்டீரியர் பொருட்களின் ஸ்டேண்டர்ட் அளவுகளின் பில்ட் இன்னாக கொடுத்திருப்பதால் நம் தேவைக்கேற்ப பொருத்தி பார்த்து அறையின் அளவுகளை மாற்றி கொள்ளவும் மிக எளிதாக இருக்கிறது.



நீங்கள் ஆட்டோகேட் அல்லது 3D Home Architect உபயோகித்திருந்தால் இந்த மென்பொருளை உபயோகிக்க எந்தவித சிரமமும் இருக்காது. அது தெரியாதவர்கள் உபயோகிப்பதற்காக சிறிய அறிமுக விளக்கம் மட்டும். இதில் உள்ள அளவுகள் அனைத்தும் செமீ ல் உள்ளீடு செய்ய வேண்டும். 10அடிக்கு 10 அடி எனில் அதை முதலில் செமீக்கு மாற்றிக்கொள்ளுங்கள் 10 அடி = 305 செமீ



மேல் வரிசையில் plan மெனுவில create walls என்பதை க்ளிக் செய்யவும். பின் வலது பக்க பேனலில் க்ளிக் செய்து அறை அளவுகளை கொடுத்து வரைய ஆரம்பியுங்கள். ஓரு அறை போன்ற அமைப்பு மட்டும் வந்தால் போதும் மற்றவற்றை எடிட் பண்ணும் வசதி இருக்கிறது. எந்த சுவரை எடிட் செய்ய வேண்டும் என விரும்புகிறீர்களோ அந்த சுவரை டபுள் க்ளிக் செய்தால் அந்த சுவரின் அளவுகள் தனி விண்டோவில் தெரியும் அதில் நமக்கு தேவையான நீளம், அகலம் மற்றும் உயர்த்தை மாற்றி கொள்ளலாம்.

சைடு பாரில் இருக்கும் டோர்ஸ் அண்ட் வின்டோஸ் ஆப்ஷனை பயன்படுத்தி தேவைப்படும் கதவை தேர்ந்தெடுத்து ட்ராக் செய்து ப்ளானில் தேவைப்படும் இடங்களில் வைத்து விடுங்கள். விண்டோவிற்கும் இதே முறையில் செய்யுங்கள்

இதில் பெட்ரூம், பாத்ரூம், சமையலறை மற்றும் ஹால்களுக்கான பர்னிச்சர் செட்கள் இன்பில்ட் ஆக இருப்பதால் நமக்கு தேவையானவற்றை தேர்ந்தெடுத்து வைத்து பார்த்து கொள்ளலாம்.



எடிட் ஆப்ஷனை தேர்வுசெய்து நமக்கு தேவையான அளவுகளை மற்றூம் கலர்களை மாற்றி பார்த்து கொள்ளலாம். புதிதாக வீடு கட்ட போகிறவர்கள் மற்றும் வீடு கட்டி கொண்டிருப்பவர்களுக்கு மிகவும் உபயோகமான மென்பொருள். குறிப்பாக இண்ட்டீரியர் டிஸைனுக்கு இது மிகவும் உபயோகமான மென்பொருள். இது முற்றிலும் இலவசமாகவே கிடைக்கிறது. இந்த சுட்டியில் தரவிறக்கி இன்ஸ்டால் செஞ்சுகோங்க.




Monday, April 19, 2010

வீடு கட்டும் செலவை குறைக்க உதவும் “லாரி பேக்கர் தொழில்நுட்பம்” - 02

வீடு கட்டும் செலவை குறைக்க உதவும் லாரி பேக்கர் தொழில்நுட்பம்தொடரின் இதற்கு முந்தைய  பகுதியை படிக்காதவர்கள் இந்த சுட்டியில் பார்த்துக் கொள்ளலாம்

இன்றைக்கு வீடு கட்டும் செலவில் மிக அதிகமான செலவை உறிஞ்சகூடியதும் கட்டிடத்தின் மிக முக்கியமான கூரை அமைப்பை பற்றி லாரி பேக்கரின் தொழில்நுட்பத்தை இந்த பதிவிற்கு எடுத்து கொண்டிருக்கிறேன்.

உங்களுக்கு ஓன்று தெரியுமா? நாம் இப்போது பயன்படுத்தி கொண்டிருக்கும் ரூப் ஸ்லாப் காங்கிரீட் முறைதான் அதிக ஸெல்ப் வெய்ட் கொண்ட முறை. அதாவது அதிக எடை கொண்ட கூரையை வடிவமைத்து அந்த எடையை தாங்கும் அளவிற்கு சுவர்கள் மற்றும் அஸ்திவாரத்தின் வடிமைப்பதின் மூலம் கட்டிடத்தின் செலவுகளை நாமாகவே கூட்டி கொண்டிருக்கிறோம். நான் சில கட்டிடத்தில் பழைய மெட்ராஸ் டெர்ரஸ் ரூப் ஐ இடித்து காங்கிரீட் ஸ்லாப் மாற்றும் வேலைகளை பார்த்திருக்கிறேன். அவ்வளவு உறுதி வாய்ந்த கூரையை இடிப்பதே கஷ்டமான வேலை. மேலும் அதில் உள்ள பொருள்கள் பலவும் வீணாகாமல் ரீயூஸ் செய்யமாறும் இருக்கும் (உதா.) உத்திரகட்டைகள், செங்கல், சுண்ணாம்பு. சொல்லப்போனால் 20% பொருள்கள் வேண்டுமானால் வீணாகும். ரீயூஸிங் மெட்டிரியல் (Reusing Material)  இன்றைய சுற்றுசூழலுக்கு உகந்த கட்டிடங்களின் முதல் கோட்பாடு. நமது பழமையான கட்டிட முறைகளில் எப்படி பொருந்தி வருகிறது என்பதை நினைத்தால் நம் மூதாதையர்களின் மீது பெருமதிப்பும், அதையெல்லாம் நாகரீக பூச்சால் மறைத்துவிடுகிற நம் தலைமுறையின் மீது கோபமும் ஓரு சேர வருகிறது. இப்ப கூட பாருங்க சொல்ல வந்த விஷயத்த விட்டு ஆதங்கம் வேறு எங்கெங்கோ செல்கிறது.

லாரி பேக்கரின் ஃபில்லர் ஸ்லாப் (Filler Slab) முறையில் எடை குறைந்த பொருள்களை கம்பிகளுக்கு இடையில் வைப்பதன் மூலம் கூரையின் ஸெல்ப் வெயிட்டை குறைக்கலாம். இதற்காக இவர் பரிந்துரைப்பது மங்களூர் ஓடுகள். இரண்டு மங்களூர் ஓடுகளை படத்தில் குறிப்பிட்ட அமைப்பில் கம்பிகளுக்கு இடையில் வைப்பதின் மூலம் கூரையின் எடையை 30% வரை குறைக்கமுடியும் என லாரி பேக்கர் கூறுகிறார்.

Filler  Slab

இதை படித்தவுடன் எனக்கு இது குறித்து எனக்கு சந்தேகம் இருந்த்து. இந்த ஓடுகளின் மேல் காங்கிரீட் விழும் போது அந்த காங்கிரீட்டின் எடைகளை ஓடுகள் தாங்குமா என்ற சந்தேகம்தான். இது குறித்து எனது பொறியியல் கல்லூரி விரிவுரையாளரிடம் கேட்ட போது அவர் சொன்னார் ”That is the power of arc shape”அதாவது ஆர்க் அமைப்பில் சாதாரண அமைப்பை விட அதிக எடையை தாங்கும் என்பது ஸ்டரக்சுரல் அடிப்படை என்பதுதான் அவரின் அந்த வார்த்தைக்கு அர்த்தம். அதை நுட்பமாக தனது ஃபில்லர் ஸ்லாப் முறையில் இணைத்த லாரி பேக்கரின் திறமையை வியக்காமல் இருக்க முடிய வில்லை.

இந்த முறைப்படி கம்பிகளுக்கு இடையே 30 x 50 cm அளவில் இடைவெளி இருக்க வேண்டும். அந்த இடைவெளியில் இரண்டு மங்களூர் ஓடுகளை ஃபில்லராக பயன்படுத்த வேண்டும். பின்னர் இதன் மேல காங்கிரீட் போட வேண்டும். இதன் மூலம் காங்கிரீட்டின் அளவு குறைவதோடு, கட்டிடத்திற்கு குளுமையும் கிடைக்கிறது. இந்த கூரை அமைப்பில் வழக்கமாக கூரையின் மேல் போடப்படும் வெதரிங்கோர்ஸும் குறைந்த அளவே தேவைப்படும்.
ஃபில்லர் ஸ்லாப் படி அமைக்கப்பட்ட வீட்டின் உட் புற தோற்றம்


இந்த தொடர்களில் பலரும் கேட்கும் சந்தேகம் இப்பிடி கட்டிய வீடுகள் உறுதியானதாக இருக்குமா என்பதும் பார்ப்பதற்கு அழகாக இருக்குமா என்பதும் முக்கிய கேள்விகளாக உள்ளது. அதற்காக அவர் கட்டிய சில கட்டிட போட்டோக்களை இங்கு இணைத்துள்ளேன். மேலும் புகைப்படங்கள் லாரிபேக்கரின் தளத்தில் உள்ளது.