Friday, August 2, 2013

சிவில் இன்ஜினியர்


”இங்க என்ன நாயே வேடிக்கை போய் வேலைய பாரு”ன்னு சும்மா நின்னுட்டு இருந்த சித்தாளை ஏசிவிட்டு என் பக்கமா திரும்பி ”ஆளு சும்மா நிக்குறான் வேடிக்க பாத்துட்டு இருக்க… வேல வாங்க தெரியல… என்னத்த படிச்சு கிழிச்சியோ… வந்துட்டானுங்க நம்ம உயிர வாங்குறதுக்குன்னு” முகத்துக்கு நேரே காறி உமிழ்ந்தா மாதிரியான பேச்சு உடம்பையே அதிர வைத்தது.. தினமும் இதே கதைதான்… 

என்னையும் சேர்த்து மூணு அனுபவமில்லாத இன்ஜினியர் அந்த சைட்டில் ஜாய்ன் பண்ணியிருந்தோம். சீனியர்ஸ்ஸோட பொண்டாட்டி ஏசுனது, வீட்ல தண்ணி வராததது, மேலதிகாரி ஏசுனது போன்ற எல்லா பிரச்சனைக்கும் எங்களை ஏசுவதுதான் அவர்களுக்கு வடிகால் ரொம்ப என்ஜாய் பண்ணி இன்வால்வ்மெண்ட்டோட ஏசிட்டு இருந்தாங்க.  

ஒரு மாசம் அப்பிடியே ஓடுச்சு ஞாயிற்றுகிழமைகளில் கான்க்ரீட்க்கு தண்ணி நனைக்க கூட ஆள் இல்லாமல் நாங்களே பாக்க வேண்டியதாயிடுச்சு.. படிச்சு முடிச்ச உடனே வேலை போலாம் ஜாலியா இருக்கலாம்னு நினைச்சா… ஓய்வு ஒழிச்சல் இல்லாத வேலை இரவும் பகலும் வெயிலில் காய்ஞ்சு மண் படிஞ்ச தலையும் சிமெண்ட் கறை படிஞ்ச ட்ரெஸ்ஸுமாய் அலைஞ்சது எங்களை எப்பவாது கண்ணாடியில் பார்க்கும் போது ஜெர்க் கொடுத்துச்சு. ஒரு மாச வெயிலில் ஒரு கோட் தார் அப்பிய மாதிரி இருந்த முகத்தை எப்பவாது ரூமில் ப்ரியா இருக்கும் போது எடுத்து பார்த்து… அப்பவே எங்கம்மா சொல்லுச்சு சிவில் எடுக்காத…சிவில் எடுக்காதன்னு நாந்தான் கேக்காம தப்பு பண்ணிட்டேனு சொல்லி வச்சா போல எல்லாரும் ஒண்ணு போல புலம்புவோம்.

அப்பதான் என் கூட படிச்ச இன்னொரு பையன் எங்களை பார்க்க வந்தான் அவனும் ஒரு வேலையில் சேர்ந்து ஒரு மாதம் ஆயிருந்துச்சு. அவனை பார்த்ததும் எங்களுக்கு ஆச்சர்யம்.. கலர் குறையாமல் முன்னை விடவும் ஜொலித்தான். விசாரிச்சப்போ கம்யூட்டரில் மட்டும்தான் வேலை… அதுவும் எட்டு மணிநேரம்தான் ஆபிஸ் பூரா ஒரே பொண்ணுங்களா இருப்பாங்கன்னு சொன்னதை கேட்டு மத்த ரெண்டு பேரும் நைட்டே பொட்டிய கட்டி கம்பெனிய விட்டு எஸ்கேப். என் ப்ராஜெக்ட் மேனேஜர் மத்த ரெண்டு பேரும் ஓடினதை பார்த்து என் பெட்டிய தூக்கி மறைச்சு வச்சு என்னைய ஓடவிடாம தடுத்திட்டாங்க.

ரெண்டு வருஷம் ஏச்சு, புழுதி, ஏக்கம், அவமானம் எல்லாத்தோட அனுபவங்கள் தொழில் நுட்பங்கள்னு பல விஷயங்களை அந்த வேலை கத்து கொடுக்க ஆரம்பிச்சுது. கொத்தனார்கள்தான் என் ஆசிரியர்கள் நிறைய்ய விஷயங்களை எளிதாய்  புரியுற வகையில் சொல்லி கொடுத்தாங்க. 

இடையில் ஓடிப்போன நண்பர்களில் ஒருவர் சிவில் லைனை விட்டுட்டு வேற லைனில் மாறிவிட்டார். இன்னொருவர் வேற லைன் மாறி மீண்டும் சிவிலுக்கே வந்துவிட்டார். ஆனால் அத்தனை ஏச்சு பேச்சுக்களோட என்னை மாதிரியே அதை சகித்து வேலையை கத்து கொண்டவர்கள் மட்டுமே இப்ப நல்ல பதவிகளில் இருக்கிறார்கள். இதுதான் சரின்னுல்லாம் சொல்றதுக்கு எழுதலை. அதிஷா ப்ளஸ்ல இப்ப படிச்சு முடிச்சவஙக்ளோட வேலைக்கு முயற்ச்சி செய்யும் மனப்பான்மை குறித்து எழுதியதை படித்ததும் தோணியது இங்கும் பதிந்து வைக்கலாம்னு இந்த பதிவு.

Wednesday, July 17, 2013

GFRG demo building

முதலில் கீழே உள்ள சுட்டியில் ஜிஎஃப் ஆர் சி பயன்படுத்தி கட்டப்பட்ட பில்டிங்கற கீழே உள்ல வீடியோவை பார்த்தேன். ஆர்வம் அதிகமாகி இதை எப்படியும் நேரில் போய் பார்த்து எப்பிடி இவ்வளவு விலை குறைவாக கட்டுறாங்கன்னு பாக்கணும்னு நினைச்சேன். நீங்களும் முதல்ல வீடியோவை பார்த்துருங்க


அந்த ஆர்வத்தில் ஐஐடியில் கட்ட பட்டுள்ள ஜிஎஃப் ஆர் சி மாடல் பில்டிங்கிற்கு நேரில் சென்று பார்வையிட்டு வந்தேன். காஸ்ட் குறித்தும் மேல் விபரங்களை அங்க யாரிடமும் கேட்டறிய முடியவில்லை. கட்டிடத்தை பார்த்து விட்டு வந்தேன் கட்டத்தில் மாட்ட பட்டுள்ள தகவல் பலகையில் கீழ்கண்ட முக்கியமான விஷயங்கள் தெளிவாக குறிக்க பட்டிருக்கு ஆனா இதையே உட்டாலக்கடி பண்ணிய ஊடகங்கள் 1981 ச. அடி கட்டிடம் 6.5 இலட்ச ரூபாயில்னு கிளப்பி விட்ட எதிர்பார்ப்போடு கிளம்பிய எங்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அதில் குறிப்பிடபட்டுள்ள மிக முக்கியமான அந்த செய்திகள்1.Total Buildup Area : 1981 sq.ft construction Cost @ 23 Lakhs

2.GFRG Panels sponsored by Rashtriya Chemicals and Fertilizers Limited (RCF) , Govt of India

3. Housed four typical flats: two for EWS (268 sq.ft carpet area) and two for LIG (497 sq ft)அதாவது கட்டுமான செலவு 1981 ச.அடியில் நாலு வீடுகள் கட்டியிருக்கிறார்கள். இதற்கான கட்டுமான செலவு 23 இலட்சம் ஆனது எனவும் குறிப்பிட்டு இருக்கிறார்கள். ஜிஎஃப் ஆர் சி பேன் ஸ்பான்ஸர் பண்ண பட்டுள்ளது எனவும் குறித்திருக்கிறார்கள். அதற்கான காஸ்ட்டும் சேர்த்துதான் இந்த 23 இலட்சமா எனவும் தெரியவில்லை. குறிப்புகளின் படி பார்த்தால் ஸ்பான்ஸர் என குறிப்பிட்டிருப்பதால் அந்த பேனல் விலையை சேர்க்காமல்தான் 23 இலட்சம் ஆகியிருக்கும் என்ற யூகத்திற்கு வரவேண்டியிருக்கிறது. 

நல்ல முயற்சிதான் இது செங்கல் சுவர் மற்றும் பூச்சுமானத்திற்கு மட்டும் இந்த பேனல் மாற்றாக இருக்கும். மற்ற படி கட்டுமான செலவில் மிகபெரிய்ய மாற்றத்தை ஏற்படுத்தாது. கட்டுமான காலத்தை குறைக்கவும், பூச்சு, செங்கற்கட்டுக்கு ஆகும் மணல் பயன்பாட்டை குறைக்கவும் இது உதவும்.
 

Monday, July 15, 2013

சிங்கம் – II - என் பார்வையில்


பொதுவாக எனக்கு சில படங்கள் டிரைலர் பார்க்கும் போதே இது கண்டிப்பா செம மொக்கையா இருக்கும்னு தோணிய படங்கள் எல்லாமே அதுபோல மொக்கையாவே இருந்திருக்கு. மாறாக சில டிரைலர் பாத்து நல்லாருக்கும் போலயே நினைச்சு ஏமாத்தின படங்கள்தான் அதிகம். இதையே எப்பிடி சொல்லலாம்னா ஒரு சோறு பதமில்லாத எந்த பானையும் இதுவரையில் பதமாகவே இருந்ததில்லை.ஆனால் சிங்கம் 2 மட்டும் விதிவிலக்கா இருக்கும்னு சில பாஸிட்டிவ் விமர்சனங்கள் படிச்சதும் தோணுச்சு. இருந்தாலும் படத்தை பார்க்காமல் எந்த முடிவுக்கும் வந்துற கூடாதுன்னு படத்தை பார்க்க போனேன்..

வாவ்… அட்டகாசம்.. ஸ்பீடான… ரசிகனை லாஜிக் பார்க்க விடாத பரபரப்பான திரைகதை, பேக் க்ரவுண்ட் ம்யூசிக்ன்னு செம  மிக்ஸிங். 80-90ஸ்ல விஜயகாந்த், அர்ஜுன் படங்கள் ஆக்‌ஷன் ரசிகர்களுக்கு விருந்தாக இருக்கும். அந்த இடத்தை இப்போ ஹரி புடிச்சுருக்காருன்னு தெரியுது.

சிங்கம் 1ல் பிரகாஷ்ராஜை கொன்றதும் ஆயுத கடத்தலை கண்காணிக்க தூத்துகுடியில் என் சி சி வாத்தியராக உளவு பார்க்க ஆரம்பித்து ஒரு ஜாதி கலவரம் ஏற்பட இருக்கும் தருணத்தில் மறுபடியும் போலிஸ் பதவிக்கு வந்து போதை பொருள் கடத்தல் நெட்வொர்க் ராஜாவை ஆப்பிரிக்காவில் போய் புடிச்சு வரும் சாதாரண கதையை திரைகதை மேஜிக்கில் கமர்ஷியல் ஹிட்டடிக்க வைத்திருக்கிறார் இயக்குனர் ஹரி.


அனுஷ்காவுக்கு வயசாயிடுச்சுன்னு விமர்சனம் எழுதறவங்கெல்லாம் அமலாபால், நஸ்ரியா கட்சிக்கு மாறிய துரோகிகளாகத்தான் இருக்கணும். எனக்கு இதிலயும் அனுஷ்க்காவை பிடிச்சிருக்கு.. அதுபோக ஸ்கூல் யூனிபார்ம்ல ஹன்சிகாவும் என் கண்ணுக்கு அழகாத்தான் தெரியுறாங்க (ரொம்ப காய்ஞ்சு கிடக்கேனோன்னு யாரும் தப்பா நினைக்க வேணாம்)
சந்தானம் காமெடி எனக்கு அவ்வளவா பிடிக்கலன்னாலும் அதுக்கு தியேட்டர்ல சின்ன பசங்கல்லாம் விழுந்து விழுந்து சிரிச்சதை பார்த்தா நமக்கு பிடிக்கலேன்னு சொன்னா வயசாயிடுச்சுன்னு பலர் நினைக்க வாய்ப்பிருப்பதால் பிடிச்சதாவே நின்னைச்சு நானும் ரெண்டு மூணு இடத்துல கைதட்டி சிரிச்சேன் (தியேட்டர்ல)


சூர்யாவுக்கு ஏழாம் அறிவு, மாற்றான் தோல்வியை சரிகட்ட வந்த கமர்ஷியல் ஹிட் என்பதை தவிர வேறு ஏதும் அதிகமா சொல்ல முடியவில்லை. நெட்வொர்க் ஜாமர் பயன் படுத்தி லாட்ஜ்ஜில் வில்லன்களை பிடிப்பது, சாயத்தண்ணீர் அடித்து கலவரகாரர்களை அடையாளம் கண்டு பிடிப்பதுங்கற மாதிரி சின்ன சின்ன புது விஷயங்களை காட்டி திரைகதையை சுவாரஸ்யமாகவே கொண்டு செல்கிறார்.


படம் பார்க்கும் போது கவனிச்ச முக்கியமான விஷயம் பொதுவா சூர்யாவிற்கு இதற்கு முந்தைய படங்களிலெல்லாம் பார்த்த வரையில் ஆண் ரசிகர்களை விடவும் பெண் ரசிகர்கள்தான் அதிகமாக இருக்கும்னு நினைக்குறேன். தியேட்டர் அதகளங்கள், ஆரவாரங்கள்ல்லாம் விஜய் அஜித் போல இவருக்கு இருக்காது.. ஆனா இதில் அதெல்லாம் தலைகீழா இருக்கு.. செம ரகளை தியேட்டர்ல…


மொத்தத்துல படம் நல்லாருக்கு எனக்கு பிடிச்சிருக்கு