Tuesday, April 27, 2010

பேச்சுலர் சமையலும்.. ஊருக்கு போதலும்..!

மூன்று வருடங்களுக்கு முன்பு கத்தாரில் நண்பர்களுடன் தங்கியிருந்தேன். வழக்கமா வெள்ளிகிழமை பக்கத்துல இருக்கற நேஷன்ல்ங்கற எடத்துக்கு இட்லி, தோசை சாப்பிடறதுக்காக போவோம். 10 ரியால் இட்லி தோசைக்கு 15 ரியால் டாக்ஸி சார்ஜ் கொடுத்து போவோம்னா நாங்க எப்பிடி காய்ஞ்சு போய் கிடந்திருப்போம்னு கற்பனை பண்ணிகிடுங்க. அப்பிடியான ஓரு சுபயோக சுபதினத்தின் போது நான் திடீரென கூட்டத்தில் ஏண்டா , நாம சமைக்க ஆரம்பிச்சா என்ன்ன்னு நான் வாயை திறக்க சனி சரியாக என் நாக்கில் வந்து உக்காந்த்து. உடனே நான் என்ன சொன்னாலும் எதிர்வாதம் பண்ணுற ஓரு பய குறுக்க புகுந்து கெக்கே பிக்கேன்னு சிரிக்க ஆரம்பிக்க.. எனக்கு வந்த கோவத்துல என நாக்குல உக்காந்துருந்த சனி நல்லா சுகமா பாயை விரிச்சு படுத்துகிச்சு. இது என்னடா பெரிய விஷயம் அரிசியை கழுவி தண்ணி ஊத்தி அடுப்புல வச்சா சாதம்.. இதெல்லாம் ஓரு மேட்டரான்னு எதிர்பதிவு போட்டேன்.

அவனும் அசரலை வெறும் சோறை வச்சு என்ன பண்ணுவேன்னு கவுண்டர் பண்ணினான். தயிர்ல மஞ்ச பொடி போட்டு கொதிக்க வச்சா மோர் குழம்பு, பருப்ப அவிச்சு மிளகா பொடி மஞ்ச பொடி போட்டா சாம்பாருன்னு எதிர்த்து பேச சனி என நாக்குல உக்காந்து கும்மி அடிக்க ஆரம்பிச்சது. காய்ஞ்சு போய் கிடந்த மத்த பசங்க்ளெல்லாம் இதையெல்லாம் கேட்ட உடனே எல்லாரும் நீ ஏண்டா உனக்கு சமைக்க தெரியுற விஷயத்தை முன்னாடியே சொல்ல்லைன்னு சண்டைக்கு வர.. நானும் பதிலுக்கு நான் சமைச்சதில்லை ஆனா பக்கத்துல இருந்து பாத்துருக்கேன் சொல்ல என்னை ஆபத்பாந்தவனா பாக்க ஆரம்பிச்சாங்க. அப்புறமா அமைச்சரவையை கூட்டி மறுநாள் இருந்து சமைக்க ஆரம்பிக்கலாம். ஆளாளுக்கு நான் காய்கறி நறுக்கி தாரேன், நான் பாத்திரம் கழுவித்தாரேன்னு துறை பிரிக்க ஆரம்பிச்சாங்க. தேவையான எல்லா சாமான்கள் காய்கறிகள், பாத்திரங்கள் போன்றவற்றை வாங்கி மறுநாள் வெள்ளிகிழமையில் இருந்து ஆரம்பிக்கலாம் பெரிய கனவோட எல்லாரும் போய் படுத்து தூங்கினாங்க.


மறுநாள் அதிகாலை 12 மணிக்கு தூங்கிட்டு இருந்த என்னை ஓருத்தன் எழுப்பினான். என்னடான்னு கேட்ட்துக்கு சமைக்கணும்லன்னு சவுண்ட் விட்டான். ங்கொய்யால .. சவுண்டா விடுற போய பாத்திரத்த கழுவுடான்னு பயல அனுப்பி விட்டு சமையலுக்கான ஆயத்தங்களை பண்ண ஆரம்பித்தேன். என்ன பண்ணலாம்னு தீவிரமா ஆலோசனை பண்ணி சாம்பார் வைக்கலாம்னு முடிவெடுத்தோம். அதுக்குள்ள ஓருத்தன் அவன் பிரெண்டுக்கு போன் பண்ணி மச்சி எங்க ரூம்ல சமைக்க ஆரம்பிக்கிறோம்டா.. மதியம் சாப்பிட வந்துருன்னு சொன்னான். நானும் அடுப்ப பத்த வைச்சு பாத்திரத்தை மேல வைச்சு அடுத்து என்ன பண்ணலாம்னு யோசிக்குறதுக்குள்ள பாத்திரத்துல இருந்து குபீர்னு புகை வர ஆரம்பிச்சுது. இங்கயே மத்த எல்லாரும் கொஞ்சம் எதிர்பார்ப்பு குறைய ஆரம்பிச்சது. சமையல் முடிஞ்ச உடனே யாரு முகத்துலயும் ஈயாடலை. நாந்தான் எல்லாருக்கும் தைரியம் குடுத்து சாப்பிட உக்கார சொன்னேன். அதுக்குள்ள போன் பண்ணிய பிரெண்டு வந்து சாம்பார் சட்டிய பாத்துட்டு ரசம் சூப்பரா வந்திருக்கே கமெண்ட் குடுத்தான். ஏற்கனவே பீதியிலயே சாப்பிட உக்காந்திருந்த ரெண்டு பேரு தட்டை பின்னாடி எடுத்தாங்க. அவன் சும்மா அதோட விடாம சாம்பரை எடுத்து ஊத்திட்டு சாரி பாஸ் காரகொழம்பா நான் ரசம் நினைச்சு சொல்லிட்டேன்னு அடுத்த கமெண்டும் போட பீதில உக்காந்துருந்த ரெண்டு அப்பாவிங்க தட்டை கழுவிட்டு நாங்க இன்னைக்கு விரதம்னு சொல்லீட்டாங்க.

மறுநாளில் இருந்து என்னை பாத்திரம் கழுவுகிற டிபார்ட்மெண்ட்டுகு மாத்திட்டாங்க... எந்த நேரத்துல என்னை அந்த டிபார்ட்மெண்டுக்கு மாத்தினாங்கலோ நானும் இது வரைக்கும் ஆறு ரூம் மாறிட்டேன் வேற வேற ஆட்கள் ஆனா எல்லாரும் என்னை அதே டிபார்ட்மெண்டிலேயே வேலை செய்ய விடுறாங்க. வீட்டுல உக்காந்த இட்த்த விட்டு எந்திரிக்காம தட்டை கூட கழுவாம அம்மாவை திட்டின பாவம்தான் என்னை விரட்டி விரட்டி பழிவாங்குதுன்னு நினைக்குறேன்.

அதற்கப்பறம் லீவில் வீட்டுக்கு போகும் போது குத்தம் குறை சொல்லாம நான் சாப்பிட்ட்தை பார்த்து எங்கம்மாவே ஆச்சர்யப்பட்டாங்க..ஏன்னா அதுக்கு முன்னாடி அந்தளவுக்கு ஆட்டம் போட்ருக்கேன். தோசை சூடு ஆறிட்டுன்னா, சோறு லேசா குழைஞ்சிட்டுன்னா, தண்ணி எடுத்து வைக்கலைன்னா... சவுண்ட் கொடுத்தே டார்ச்சர் பண்ணிருக்கேன்.

இதெல்லாம் எதுக்கு ஞாபகம் வருதுன்னா இன்னும் ரெண்டு நாள்ல ஊருக்கு போறேன். இனி கொஞ்ச நாளுக்கு வீட்டு சாப்பாடு சந்தோசமா சாப்பிடலாம்.

டிஸ்கி:

கல்யாணம் ஆக போகுற வினோத், கிஷோர் மாதிர் ஆளுங்களெல்லாம் இதை பாத்து மெர்ச்ல்லாக வேண்டாம். கல்யாணம் ஆனபின் உங்களுக்கு நல்லா சமைக்க தெரிந்து விடும். டோண்ட் வொர்ரி... பி ஹேப்பி...

பதிவர்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு

அதனால கொஞ்ச நாளுக்கு என்னாடா இது மொக்க பதிவு குறைஞ்சிட்டே... அனானி கமெண்ட் வரலையே நினைக்குறவங்களுக்கெல்லாம் நான் ஓண்ணே ஓண்ணு சொல்லிக்க ஆசை படுறேன்..
நான் ஊருக்கு போறேன்.. நான் ஊருக்கு போறேன்.. நான் ஊருக்கு போறேன்..

Wednesday, April 21, 2010

என் கதைக்கு மொக்கை என பெயர் வை

சிறு வயதில் கதை கேட்ட அனுபவததை பகிர சொல்லி தொடர் பதிவுக்கு அழைத்த அண்ணன் ஸ்டார்ஜனுக்கு நன்றி.

இப்பிடி ஓரு மொக்கையை வாழ்நாளில் படிச்சதில்லைன்னு நறநறன்னு உங்களுக்கு கோவம் வந்துச்சுன்னா.. அப்பிடியே மனசுக்குள்ள வைச்சுருக்காதீங்க அது உடம்புக்கு நல்லதில்ல. நான் இதுக்கு காரணமில்லை. அதனால இதுக்கு காரணமான ஸ்டார்ஜனை திட்டி உங்க கோவத்த தணிச்சுகிடுங்க. :) 


எப்பவுமே கொலை பண்ணியவனை விட அதுக்கு காரணமாக இருந்தவர்தான் அதிக தண்டனைக்குரியவர்னு இந்திய அரசியலமைப்பு சட்டம் சொல்லுது


--------

திருநெல்வேலி டவுணில் வளவும் வளவு சார்ந்த இடத்தில்தான் என்னுடைய ஆரம்பகாலங்கள். சின்ன பசங்க ஒரு பத்து பேருக்கு மேல இருப்போம். காலையில் பக்கத்துல இருக்கற புளியந்தோப்புக்கு போனோம்னா மதியம் சாப்பிட வீட்டுல கம்போட வந்து அடிச்சு இழுத்துட்டு போனாத்தான் உண்டு. ஆனா இருட்டின உடனே வளவோட இருக்கற திண்ணைல உக்காந்து பக்கத்துவீட்டு அக்கா, ஆச்சியெல்லாம் சொல்லுற கதை கேக்குற அனுபவம் ஓரு அற்புதமான விஷயம். அந்த வளவு, அந்த திண்ணை, பகிர்ந்து சாப்பிடும் சாப்பாடு, அங்க கேக்குற கதை, இதையெல்லாம் நினைக்கும் போது இன்னொரு தடவை அந்த காலமெல்லாம் திரும்பி வாராதான்னு இருக்கு.

அதுல சுந்தர் ஆச்சின்னு ஓருத்தங்க சொல்லுற கதைக்கு நாங்கெல்லாம் பயங்கர பேன். அவங்க ஓரு ஊர்ல ஒரு பெரிய்ய்யய… ராஜான்னு ஆரம்பிச்சா அவரோட பிரம்மாண்டம் எங்க எல்லாரோட கற்பனையிலும் விரிய ஆரம்பிக்கிற அளவுக்கு இருக்கும் அவங்களோட கதை சொல்லும் திறன். சொல்லப்போனால் அவங்ககிட்ட கதை கேக்குறதுக்குகாகவே சாயங்காலங்களில் திண்ணைகளில் கூடுவதை வழக்கமாகவே வைத்திருந்தோம். அப்பிடி ஓரு பெளர்ணமி நாளில் நிலவை காட்டி அங்க ஓரு பாட்டி காலை நீட்டி உக்காந்து வடை சுட்டுகிட்டு இருக்கான்னு (பாருங்க எவ்ளோ புத்திசாலின்னு, பாட்டி வடை சுட்ட கதை லொகேஷனை நிலாவில் வைச்சுட்டாங்க) சொன்னதை கேட்டு நிலவை பார்த்தால் அந்த பாட்டி உருவம் அப்பிடியே தெரிய ஆரம்பித்தது. அப்புறம் ஓவ்வொரு பெளர்ணமியிலும் நிலவை பார்க்கும் போதும் எனக்கு சுந்தர் ஆச்சிதான் நினைவுக்கு வருவார்கள்.




பின்னாட்களில் பள்ளியில் ஆர்ம்ஸ்டார்ங்தான் நிலவுக்கு முதலில் போனவர்னு படிக்கும்போது அவரு அந்த பாட்டிய பாத்திருப்பாரோ, பாட்டி அப்பவாச்சும் நீட்டிய காலை மடக்கியிருக்குமா என பலவாறு எனக்கு யோசனைகள் விரிய தொடங்கின. அதுவும் அவர்கள் சொன்ன மூணு கண்ணன் கதை எங்களில் பலபேரை ரொம்ப நாள்கள் பயத்தில் வைத்திருந்தன.


--------------
அந்த ஆச்சி பல கதைகள் சொல்லியிருந்தாலும் எனக்கு மறக்காம இருக்கற ஓரு கதையை மட்டும் இந்த தொடர் பதிவுக்கு எடுத்து கொள்கிறேன்.

ஓரு பெரிய்ய்ய்ய காடு அதில மரமெல்லாம் அடர்த்தியா இருக்கும். கொஞ்சம் கூட வெளிச்சமே உள்ள வராத அளவுக்கு நெருக்கமான மரங்கள் நிறைஞ்ச காடு அது.

ம்ம் (அங்கங்க மானே தேனேன்னு போடுற மாதிரி ம்ம் கொட்டுறது நாங்கதான். நீங்களும் ம்ம் கொட்டிகிட்டே படிங்க )

அந்த காட்டுல ஓரு புறா இருந்துச்சு. அது சாப்பிடுறதுக்காக காடு முழுதும் சுத்தி மரத்தில உள்ள பழங்களையெல்லாம் சாப்பிட்டு தண்ணி குடிக்கறதுக்காக ஓரு ஆத்தங்கரைக்கு வந்திச்சு.

ம்ம்


அப்போ ஆத்துல ஓரு எறும்பு தண்ணில தத்தளிச்சுட்டு இருந்த்தை பார்த்து மரத்தில உள்ள ஓரு இலையை எடுத்து அந்த எறும்பு பக்கத்துல போட்டுச்சு. எறும்பும் அதுல ஏறி உயிர் பிழைச்சதாம்.

ம்ம்



அப்புறம் கொஞ்சநாள் கழிச்சு ஓரு வேடன் வேட்டைக்கு காட்டுக்கு வந்தான். அவன் மரத்து மேல உக்காந்து இருக்கற புறாவை பார்த்தது சத்தம் போடாமல் மெதுவா அம்பை எடுத்து வில்லில் பூட்டி குறிபார்த்தான்.


அச்சச்சோ….


அவன் அந்த புறாவை அடிக்க போற சமயத்தில் அங்க வந்த எறும்பு அவன் காலை ‘நறுக்குன்னு’ கடிச்சு வைக்க அவன் குறி தப்பி புறா உயிர் பிழைச்சிட்டாம்.

அய்யா :)

அவ்ளோதான் முடிஞ்சுது




Monday, April 19, 2010

வீடு கட்டும் செலவை குறைக்க உதவும் “லாரி பேக்கர் தொழில்நுட்பம்” - 02

வீடு கட்டும் செலவை குறைக்க உதவும் லாரி பேக்கர் தொழில்நுட்பம்தொடரின் இதற்கு முந்தைய  பகுதியை படிக்காதவர்கள் இந்த சுட்டியில் பார்த்துக் கொள்ளலாம்

இன்றைக்கு வீடு கட்டும் செலவில் மிக அதிகமான செலவை உறிஞ்சகூடியதும் கட்டிடத்தின் மிக முக்கியமான கூரை அமைப்பை பற்றி லாரி பேக்கரின் தொழில்நுட்பத்தை இந்த பதிவிற்கு எடுத்து கொண்டிருக்கிறேன்.

உங்களுக்கு ஓன்று தெரியுமா? நாம் இப்போது பயன்படுத்தி கொண்டிருக்கும் ரூப் ஸ்லாப் காங்கிரீட் முறைதான் அதிக ஸெல்ப் வெய்ட் கொண்ட முறை. அதாவது அதிக எடை கொண்ட கூரையை வடிவமைத்து அந்த எடையை தாங்கும் அளவிற்கு சுவர்கள் மற்றும் அஸ்திவாரத்தின் வடிமைப்பதின் மூலம் கட்டிடத்தின் செலவுகளை நாமாகவே கூட்டி கொண்டிருக்கிறோம். நான் சில கட்டிடத்தில் பழைய மெட்ராஸ் டெர்ரஸ் ரூப் ஐ இடித்து காங்கிரீட் ஸ்லாப் மாற்றும் வேலைகளை பார்த்திருக்கிறேன். அவ்வளவு உறுதி வாய்ந்த கூரையை இடிப்பதே கஷ்டமான வேலை. மேலும் அதில் உள்ள பொருள்கள் பலவும் வீணாகாமல் ரீயூஸ் செய்யமாறும் இருக்கும் (உதா.) உத்திரகட்டைகள், செங்கல், சுண்ணாம்பு. சொல்லப்போனால் 20% பொருள்கள் வேண்டுமானால் வீணாகும். ரீயூஸிங் மெட்டிரியல் (Reusing Material)  இன்றைய சுற்றுசூழலுக்கு உகந்த கட்டிடங்களின் முதல் கோட்பாடு. நமது பழமையான கட்டிட முறைகளில் எப்படி பொருந்தி வருகிறது என்பதை நினைத்தால் நம் மூதாதையர்களின் மீது பெருமதிப்பும், அதையெல்லாம் நாகரீக பூச்சால் மறைத்துவிடுகிற நம் தலைமுறையின் மீது கோபமும் ஓரு சேர வருகிறது. இப்ப கூட பாருங்க சொல்ல வந்த விஷயத்த விட்டு ஆதங்கம் வேறு எங்கெங்கோ செல்கிறது.

லாரி பேக்கரின் ஃபில்லர் ஸ்லாப் (Filler Slab) முறையில் எடை குறைந்த பொருள்களை கம்பிகளுக்கு இடையில் வைப்பதன் மூலம் கூரையின் ஸெல்ப் வெயிட்டை குறைக்கலாம். இதற்காக இவர் பரிந்துரைப்பது மங்களூர் ஓடுகள். இரண்டு மங்களூர் ஓடுகளை படத்தில் குறிப்பிட்ட அமைப்பில் கம்பிகளுக்கு இடையில் வைப்பதின் மூலம் கூரையின் எடையை 30% வரை குறைக்கமுடியும் என லாரி பேக்கர் கூறுகிறார்.

Filler  Slab

இதை படித்தவுடன் எனக்கு இது குறித்து எனக்கு சந்தேகம் இருந்த்து. இந்த ஓடுகளின் மேல் காங்கிரீட் விழும் போது அந்த காங்கிரீட்டின் எடைகளை ஓடுகள் தாங்குமா என்ற சந்தேகம்தான். இது குறித்து எனது பொறியியல் கல்லூரி விரிவுரையாளரிடம் கேட்ட போது அவர் சொன்னார் ”That is the power of arc shape”அதாவது ஆர்க் அமைப்பில் சாதாரண அமைப்பை விட அதிக எடையை தாங்கும் என்பது ஸ்டரக்சுரல் அடிப்படை என்பதுதான் அவரின் அந்த வார்த்தைக்கு அர்த்தம். அதை நுட்பமாக தனது ஃபில்லர் ஸ்லாப் முறையில் இணைத்த லாரி பேக்கரின் திறமையை வியக்காமல் இருக்க முடிய வில்லை.

இந்த முறைப்படி கம்பிகளுக்கு இடையே 30 x 50 cm அளவில் இடைவெளி இருக்க வேண்டும். அந்த இடைவெளியில் இரண்டு மங்களூர் ஓடுகளை ஃபில்லராக பயன்படுத்த வேண்டும். பின்னர் இதன் மேல காங்கிரீட் போட வேண்டும். இதன் மூலம் காங்கிரீட்டின் அளவு குறைவதோடு, கட்டிடத்திற்கு குளுமையும் கிடைக்கிறது. இந்த கூரை அமைப்பில் வழக்கமாக கூரையின் மேல் போடப்படும் வெதரிங்கோர்ஸும் குறைந்த அளவே தேவைப்படும்.
ஃபில்லர் ஸ்லாப் படி அமைக்கப்பட்ட வீட்டின் உட் புற தோற்றம்


இந்த தொடர்களில் பலரும் கேட்கும் சந்தேகம் இப்பிடி கட்டிய வீடுகள் உறுதியானதாக இருக்குமா என்பதும் பார்ப்பதற்கு அழகாக இருக்குமா என்பதும் முக்கிய கேள்விகளாக உள்ளது. அதற்காக அவர் கட்டிய சில கட்டிட போட்டோக்களை இங்கு இணைத்துள்ளேன். மேலும் புகைப்படங்கள் லாரிபேக்கரின் தளத்தில் உள்ளது.













Monday, April 12, 2010

தமிழிஷில் மால்வேர் எச்சரிக்கை - IE ல் ஓபன் செய்யும் நண்பர்கள் கவனத்திற்கு..!!!

இன்று காலையில் தமிழிஷ் தளத்தை கூகுள் குரோமில் ஓபன் பண்ணும் போது மால்வேர் எச்சரிக்கை செய்தி வருகிறது. இது “aathavanonline.com” என்ற ஹோஸ்டில் இருந்து வருவதாக எச்சரிக்கிறது. ஆகவே IE ல் தமிழிஷ் தளத்தை ஓபன் பண்ணும் நண்பர்கள் கொஞ்சம் எச்சரிக்கையுடன் இருக்கவும். தமிழிஷ் நிர்வாகத்தினர் இந்த பிரச்சினையை 
சரிசெய்யும் வரை பொறுமையாக இருக்கவும். அந்த எச்சரிக்கையின் ஸ்கீரின்ஸாட் கீழே..



தமிழிஷ் நிர்வாகத்தினர் இதை விரைவில் சரிசெய்து விடுவார்கள் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறேன்.

தமிழிஷ் நிர்வாகத்தினருக்கும் இது குறித்து மெயில் அனுப்பி இருக்கிறேன். 


பிகு:

தமிழிஷ் நிர்வாகத்தினர் இதனை உடனடியாக சரிசெய்து விட்டார்கள். அதனை எனக்கு மின்மடல் மூலம் தெரிவித்தும் இருக்கிறார்கள். அவர்களுக்கு நன்றி



தமிழிஷ் நிர்வாகத்தினர் எனக்கு அனுப்பிய பதில் மடல்

romTamilish Service
toகண்ணா
dateMon, Apr 12, 2010 at 10:46 AM
subjectRe: Contact Form: Malware warning

hide details 10:46 AM (5 minutes ago)
கவனத்திற்கு கொண்டு வந்ததற்கு மிக்க நன்றி கண்ணா! தமிழிஷில் இடப்பட்டுள்ள விளம்பரம் சார்ந்து அந்த எச்சரிக்கை வருவதாக நினைக்கிறோம். தீர்வு காணும் வரை அந்த விளம்பரத்திற்கு தமிழிஷில் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

தொடர்ந்து இது போன்று சரியான நேரத்தில் உங்களைப் போன்ற பயனர்கள் உதவுவது, தமிழிசை சிறப்புடன் நடத்தி செல்ல உதவுகிறது. உங்களின் இந்த தகவலுக்கு மிக்க நன்றி.

நன்றியுடன்
தமிழிஷ் 



Thursday, April 1, 2010

அகிள உளக தமில்கொலைபதிவற்கல் சங்கம்

பிரபல பதிவர் கவிபேரரசு குசும்பன் ஆரம்பித்த அகில உலக தமிழ்வலைபதிவர்கள் சங்கத்தில் சிலபல குறைகள் இருப்பதாலும் குறைந்தபட்ச பதிவர்களின் தேவையை அது பூர்த்தி செய்யுமா என்ற கேள்வி எக்கி நிற்பதாலும், பிரபல பதிவர்களை மட்டுமே அவர்கள் குறிப்பிடுவதாலும், பிரபலமல்லாத பதிவர்களின் நலனை மட்டுமே மனதில் வைத்து போட்டி சங்கம் அமைக்க முடிவெடுத்தாகி விட்டது. ஆம் உங்கள் நலனை முன்னிட்டு “அகிள உளக தமில்கொலைபதிவற்கல் சங்கம்” ஆரம்பிக்க படுகிறது.

 

இந்த சங்கத்தில் யாரெல்லாம் சேரலாம்



நான் தினமும் பல பேருக்கு கமெண்ட் போடுகிறேன் ஆனால் யாருமே எனக்கு கமெண்ட் போட வில்லையே என கவலைபடுவரா நீங்கள்..???

எனக்கு தமிழில் சரியாக டைப்ப வரவில்லை ஆனால் நினைத்தை எழுத வேண்டும் என்ற ஆர்வம் உள்ளவரா..???

ஓரு வாக்கியம் டைப் செய்யவே நாக்கு தள்ளுதே.. எப்பிடிதான் பக்கம் பக்கமா டைப் செய்றாங்களோன்னு வாய் பிளப்பவரா..???

சீரியஸான பதிவில் நீங்கள் எதையாவது சொன்னால் வாசிப்பனுவம் பத்தாது, அது இதுன்னு சொல்லி உங்களை சிரிப்பு போலிஸ் ஆக்குறாங்களா..???

உங்களை யாராவது மானங்கெட்ட தனமா ஏசி கமெண்ட் போட்டதும் ரத்தம் சூடாகி திட்டலாம் என டைப்ப ஆரம்பித்தால் நிறைய ஸ்பெல்லிங் மிஸ்டேக் வருகிறதே என வருத்தப்படுபவரா,,????

இதில் குறிப்பிடபடாத இன்னும் பலவற்றையும் செய்பவரா நீங்கள்….?????


கவலையை விடுங்கள்.. உங்கள் பிரச்சினைக்கான நிரந்தர தீர்வுதான் அகிள உளக தமில்கொலைபதிவற்கல் சங்கம்.

இதில் சேர்பவர்களுக்கு பதிவு காத்தாடாமல் இருக்க ஆள் வைத்து பின்னூட்டமும் ஓட்டும் போட ஏற்பாடு செய்யப்படும்.

பிரபல பதிவர்களுக்கு நீங்கள் போடும் பின்னூட்டத்திற்கு பதில் சொல்ல வில்லையென்றால் சங்கத்தின் மூலம் அவர்களுக்கு இம்போசிஷன் போட ஏற்பாடு செய்யப்படும்

பிரபலபதிவர்கள் உங்களுக்கு பின்னூட்டத்தில் ஸ்மைலி மட்டும் போட்டு சென்றால் அவர்களை தக்க விதத்தில் தட்டி கேட்கப்படும்.

இதன் சங்கத்து உறுப்பினர்களை ஏன் தவறாக டைப்பிகிறாய் என கேட்டால் கேட்டவர்களின் மூக்கில் குத்த ஆட்கள் நியமிக்கப்படும்.

ஏதேனும் பிரச்சனை என்றால் எஸ்ஸாவது எப்பிடி? யாராவது மானம் கெட்ட கேள்வி கேட்டாலும் கொஞ்சம் கூட சூடு, சொரணையில்லாமல் இருப்பது எப்படி? போன்றவைகள் பதிவர்பட்டறையில் சொல்லிதரப்படும் என்பதையும் இங்கு தெரிவித்து கொள்கிறோம்.

மேலும் ஆலோசனைகள் தற்போது சங்கத்துல எவனுமே சேராததால.. சேர்ந்தஉடன் ஆலோசித்து பிறகு சொல்லப்படும்.


உடனே முந்துங்கள். முதலில் வரும் 10 அதிர்ஷ்டசாலி நேயர்களுக்கு பஸ்ஸுல் ஜன்னலோர சீட் வழங்கப்படும் என்பதையும் சங்கத்தின் சார்பில் தெரிவிக்க கடமை பட்டுள்ளோம்



டிஸ்கி:

இந்த சங்கத்தில் எல்லாருமே தலைவர்கள்தான். எத்தனை நபர்கள் சேருகிறார்களோ அத்தனை பிராஞ்ச் ஆரம்பித்து அனைவருக்கும் தலைவர் பதிவு அளிக்கப்படும் என்பதையும் இதன் மூலம் தெரிவிக்க கடமைபட்டிருக்கிறோம்.