Tuesday, July 27, 2010

இராமாயணம் நெல்லையில் நடந்ததா?? ஜடாயு தீர்த்தமும் காட்டு இராமர் கோவிலும் சாட்சியங்களா??

நேற்றுதான் இராவணன் படம் பார்க்க முடிந்தது. நான் பொதுவாக பொழுதுபோக்கவே படம் போவதாலும் இதில் விஷுவல் ட்ரீட் நல்லா இருந்ததாலும் எனக்கு படம் பிடித்திருந்தது. ஆனால் மணிரத்னம் கடத்தப்படும் இடமாக நெல்லையை ( அவரின் செண்டிமெண்ட்..??!!) காண்பித்து இருப்பார். அதை பார்க்கும்போது என் நினைவுகள் நெல்லையின் காட்டுராமர் கோவிலையும், ஜடாயு தீர்த்தத்தையும் நோக்கி போக ஆரம்பித்தது.


சரியாக நினைவில்லாத ஓரு நாளின் சாயங்காலம் உறவினரின் அழைப்பின் பேரில் நெல்லை அருகேயுள்ள அருகன்குளம் கிராமத்தில் உள்ள எட்டெழுத்து பெருமாள் கோவிலுக்கு சென்று கொண்டிருந்தோம். எனக்கு அந்த கோவிலுக்கு செல்வது அதுதான் முதல் முறை, நண்பர் சில முறைகள் சென்றிருக்கிறார். அங்கு சென்று சாமி கும்பிட்டுவிட்டு வேறெங்க போகலாம்னு கேள்வியை வீசி விட்டு வண்டியை எடுக்க எத்தனிக்கும் போது

"இங்க பக்கத்துலதான் ஜடாயு தீர்த்தமும், காட்டு ராமர் கோவிலும் இருக்கு ஹிஸ்டாரிக்கல் பிளேஸ் இராமயணயத்துல இராவணன் சீதையை கடத்திட்டு போனது இங்க இருந்துதான். தெரியுமா?

வந்த எதிர் கேள்வியில் சுவாரஸ்யம் பல மடங்கு கூடி என்னப்பா சொல்ற போலாம் உடனேன்னு வண்டியை திருப்பினோம்.

ஜடாயு  தீர்த்தம்
சற்று குறுகலான சுற்றிலும் மரங்கள் சூழ்ந்த ஓரு பாதையில் செல்லும் போதே அணில்களின் குறுக்கு ஓட்டங்களும், அடர்ந்த வளர்ந்திருந்த மரங்களும் ஓரு காட்டுக்குள் செல்வது போன்ற தோற்றத்தை கொடுத்தது. அதிலிருந்து கொஞ்சம் தள்ளிப்போனால் ஓரு கோசாலை வருகிறது அதையும் தாண்டி சென்றால் முதலில் வருகிறது ஜடாயு தீர்த்தம். சென்றால் சிறிய கிணறு போன்ற அமைப்பும் அதையொட்டிய ஆறும் அதனுடன் இணைந்த சிறிய கோவிலும் அமைந்துள்ளது. அதாவது சீதையை இராவணன் கடத்தி செல்லும் போது ஜடாயு அவனுடன் போராடி வீழ்ந்து உயிருக்கு போராடி கொண்டிருக்கும்போது அங்கு வந்த இராமன் ஜடாயுவிற்கு தண்ணீர் தருவதற்காக அம்பால் உருவாக்கிய கிணறுதான் இது என்று இங்குள்ளவர்களால் நம்பப்படுகிறது. பிறகு ஜடாயு இறந்தவுடன் அவருக்கான ஈமகாரியங்களை சற்று தொலைவிலுள்ள சிவன் கோவிலில் செய்ததாகவும் நம்பிக்கைகள் நிலவுகின்றன. இங்கு மூன்று கிணறு போன்ற அமைப்புகளை ஜடாயு தீர்த்தம், இராம தீர்த்தம், சிவ தீர்த்தம் என அழைக்கிறார்கள். இதனருகிலேயே இருக்கிறது காட்டு இராமர் கோவில். இங்குள்ள ஆஞ்சனேயர் சிலை சுயம்பு என கூறுகிறார்கள்.

காட்டு இராமர் கோவில்

இராவணன் இங்கிருந்துதான் சீதையை கடத்தியதாகவும், கடத்தும் போது நடந்த போரில் ஜடாயு வீழ்த்தப்பட்டு கிடந்ததாகவும் அப்போது இராமர் ஜடாயுவிற்காக உருவாக்கிய நீரூற்றுதான் இப்போது ஜடாயு தீர்த்தம் என அழைக்கப்படுவதாகவும் அங்கிருந்தவர்கள் சொன்னார்கள். மிக ஆச்சர்யமாக இருந்தது. இது உண்மையாக இருக்குமா? அல்லது உணமை மாதிரி நம்ப வைக்க பட்டிருக்கிறதா என. உண்மையாக இருந்தாலும், உண்மை மாதிரி நம்ப வைக்கப்பட்டிருந்தாலும் அது மிக ஆச்சர்யமானதுதான். எது எப்படியோ நான் அந்த அமைதியான சூழலுக்காகவே அடிக்கடி அங்கு போக ஆரம்பித்தேன்.

டிஸ்கி:
எனக்கு இறை நம்பிக்கை உண்டென்றாலும் அதை என் எழுத்தில் கொண்டு வர  எப்போதும் விரும்பியதில்லை.  இந்த பதிவும் மிகுந்த தயக்கங்களின் இடையேத்தான் எழுதுகிறேன்.  இது இந்த இடம் குறித்து நீண்டநாடகளுக்கு பின்தான் தெரிந்தது. என்னை போல சிலர் இருப்பதாலும், இது குறித்த விவாதங்களுக்கான ஓரு ஆரம்பமாகவும்தான்  இந்த பதிவு.


படங்கள் உதவி:  கூகுள்

21 comments:

Anonymous said...

Interesting!

நாடோடி said...

ப‌ல‌ ந‌ம்பிக்கைக‌ள் கிராம‌ங்க‌ளில் இருக்கின்ற‌து..... அதில் இதுவும் ஒன்று என‌ நினைக்கிறேன்.. யார‌வ‌து விள‌க்கினால் நானும் தெரிந்து கொள்வேன். ப‌கிர்விற்கு ந‌ன்றி த‌ல‌.

நாஞ்சில் பிரதாப் said...

எப்படிவே... இப்படியெல்லாம்...

அப்ப நான் கேள்விப்பட்ட கதையெல்லாம் கேட்டா மயங்கி விழுந்துடுவிரோ....

ஜடாயு ராவணன் கூட சண்டைப்போட்டு விழுந்தது ராமேஸ்வரத்தில் உள்ள கடற்கரை பகுதியில் அப்படின்னு ராமயாணம் சொல்லுது... இதுல இது எங்கேருந்து புதுசா.... கதைகள் ஆயிரம் இருக்கும் தல...எல்லா நம்பிக்கைகள்தான்...பிறரின் நம்பிக்கையை கிண்டலடிப்பது தவறு...

அப்படியான்னு கேட்டுட்டு போய்டே இருக்கனும்

Chitra said...

டிஸ்கி:
எனக்கு இறை நம்பிக்கை உண்டென்றாலும் அதை என் எழுத்தில் கொண்டு வர எப்போதும் விரும்பியதில்லை. இந்த பதிவும் மிகுந்த தயக்கங்களின் இடையேத்தான் எழுதுகிறேன். இது இந்த இடம் குறித்து நீண்டநாடகளுக்கு பின்தான் தெரிந்தது. என்னை போல சிலர் இருப்பதாலும், இது குறித்த விவாதங்களுக்கான ஓரு ஆரம்பமாகவும்தான் இந்த பதிவு.


..... இதில் தயக்கம் என்ன? நமது சொந்த விருப்புகள், கருத்துக்கள், நம்பிக்கைகள், எண்ணங்கள், தத்துவங்கள், கிறுக்கல்கள் பற்றி கவலை இல்லமால் பகிர்வதற்குத்தானே நமக்கே நமக்கு என்று ஒரு ப்லாக் வச்சுருக்கோம்..... கலக்குங்க!

KISHORE said...

நல்ல பகிர்வு.. எல்லாவற்றையும் கற்பனை என்று சொல்ல முடியாது.. நடந்த நிகழ்வுகளை காலபோக்கில் மிகைபடுத்தி சொல்லி இருக்கலாம்..

அக்பர் said...

// எனக்கு இறை நம்பிக்கை உண்டென்றாலும் அதை என் எழுத்தில் கொண்டு வர எப்போதும் விரும்பியதில்லை. இந்த பதிவும் மிகுந்த தயக்கங்களின் இடையேத்தான் எழுதுகிறேன். இது இந்த இடம் குறித்து நீண்டநாடகளுக்கு பின்தான் தெரிந்தது. என்னை போல சிலர் இருப்பதாலும், இது குறித்த விவாதங்களுக்கான ஓரு ஆரம்பமாகவும்தான் இந்த பதிவு.//

நல்ல விசயங்களை பகிர்ந்து கொள்ள என்ன தயக்கம் கண்ணா.

உங்களது நம்பிக்கைகளை தெரிவிப்பது உங்கள் உரிமை.

பிறரது நம்பிக்கையில் தலையிடுவதுதான் கூடாது.

|கீதப்ப்ரியன்|Geethappriyan| said...

கண்ணா,
நல்ல பதிவு,நம்ம நம்பிக்கை மற்றை யாரையும் கட்டாயப்படுத்தாமலோ,காயப்படுத்தாமலோ இருக்கும் வரை தப்பே இல்லை,நான் தினமும் பூஜை செய்து திருநீர் குங்குமம் வைப்பேன்,வீட்டை விட்டு லிஃப்டுக்கு வரும்போதே அழித்துவிடுவேன்,நான் இன்ன ஆள் என்று எதற்கு வெளிக்காட்டணும் என்று தான்.நான் பிற மதத்தினரிடம் பேசும் போது கூட அவர்கள் மதத்தை உயர்வாகவே மதித்து பேசுவேன்,அப்போது தான் நம் மதத்தை மதிப்பார்கள்.

சி. கருணாகரசு said...

உங்க பகிர்வு வியப்பாத்தான் இருக்கு.

கண்ணா.. said...

வாங்க ராதை,

வருகைக்கும், கருத்திற்கும் நன்றி

கண்ணா.. said...

வாங்க நாடோடி @ ஸ்டீபன்,

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி தல..

கண்ணா.. said...

வாலே மக்கா நாஞ்சிலு,

வருகைக்கும் கருத்திற்கும் நன்றிவே..

என்ன பண்ண சில சமயம் கேள்விப்பட்டதை அப்படியான்னு கேட்டுட்டு போகாம பதிவுல பகிரணும்னு தோணுது..

கண்ணா.. said...

வாங்க சித்ராக்கா,

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி...

//இதில் தயக்கம் என்ன? நமது சொந்த விருப்புகள், கருத்துக்கள், நம்பிக்கைகள், எண்ணங்கள், தத்துவங்கள், கிறுக்கல்கள் பற்றி கவலை இல்லமால் பகிர்வதற்குத்தானே நமக்கே நமக்கு என்று ஒரு ப்லாக் வச்சுருக்கோம்..... கலக்குங்க//

:))))))))))))))))))

கண்ணா.. said...

வாங்க கிஷோர்,

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி மச்சி...

கண்ணா.. said...

வாங்க அக்பர்

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி..

தயக்கம் என்று சொல்வதை விடவும் எழுத்தில் வெளிப்படுத்த விரும்பாதது என எடுத்து கொள்ளலாம்

:)

கண்ணா.. said...

வாங்க கார்த்தி,

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி...

கண்ணா.. said...

வாங்க கருணாகரசு,

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

sweatha said...

I see your point !!, Your writting could change the world that you want. Express your thoughts!!. Politics , Business , Entertainment , Sports & Games , Life & Events ,and Health what else?. Meet your like minded here. The top social gathering in one place all the top notches meet here. It is not about win the race, participation is all matters. We proud inviting you to the the internet's best Social community. www.jeejix.com .

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

அன்புள்ள கண்ணா.. உங்களுக்கு ஒரு விருது கொடுத்துள்ளேன்.. அன்போடு பெற்றுக்கொள்ளுங்கள்..

என்றும் அன்புடன்
உங்கள் ஸ்டார்ஜன்.

http://ensaaral.blogspot.com/2010/08/blog-post_07.html

ரிஷபன்Meena said...

இராமநாதபுர மாவட்டத்துடன் தான் இது ஜீயாகரப்பிக்கலா கொஞ்சம் பொருந்தி வருகிறது என்று சிலர் சொல்வதை கேட்டிருக்கிறேன்.

அனுமன் கண்டேன் தேவியை என்ற இடம்: கண்ட தேவி
வாலியுடன் போர் புரிந்தது: வாலி நோக்கம்.
இறகு விழுந்த இடம் : இறகு சேரி

ஆனால் என்ன எல்லாமே நம்பிக்கைதான்.

ராம்ஜி_யாஹூ said...

ராமாயண சில நிகழ்வுகள் நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் நடந்தன. ஜடாயு தீர்த்தம், குரங்கு அணி வகுத்த இடம் (குரங்கணி- ஏரல் அருகே) போன்றவை.

பகிர்ந்தமைக்கு நன்றிகள்.

Manickam said...

காஞ்சிபுரத்திற்கு மேற்கே 10 கி.மீ.தொலைவில் திருப்புக்குழி என்ற கிராமத்தில் ஜடாயு வெட்டப்பட்டு வீழ்ந்து கிடந்ததாகவும் ராமன் வந்த உடன் சீதை ராவணனால் கடத்தப்பட்டதைக் கூறிவிட்டதாகவும் ராமன் ஜடாயுவிற்கு ஈமக்கிரியைகள் செய்ததாகவும் சொல்லப்படுகிறது. புள் என்றால் பறவை. பறவை குழியில் இடப்பட்டதால் திருபுள்குழி மருவி திருப்புக்குழி என்றாகிவிட்டது.