நேற்றுதான் இராவணன் படம் பார்க்க முடிந்தது. நான் பொதுவாக பொழுதுபோக்கவே படம் போவதாலும் இதில் விஷுவல் ட்ரீட் நல்லா இருந்ததாலும் எனக்கு படம் பிடித்திருந்தது. ஆனால் மணிரத்னம் கடத்தப்படும் இடமாக நெல்லையை ( அவரின் செண்டிமெண்ட்..??!!) காண்பித்து இருப்பார். அதை பார்க்கும்போது என் நினைவுகள் நெல்லையின் காட்டுராமர் கோவிலையும், ஜடாயு தீர்த்தத்தையும் நோக்கி போக ஆரம்பித்தது.
சரியாக நினைவில்லாத ஓரு நாளின் சாயங்காலம் உறவினரின் அழைப்பின் பேரில் நெல்லை அருகேயுள்ள அருகன்குளம் கிராமத்தில் உள்ள எட்டெழுத்து பெருமாள் கோவிலுக்கு சென்று கொண்டிருந்தோம். எனக்கு அந்த கோவிலுக்கு செல்வது அதுதான் முதல் முறை, நண்பர் சில முறைகள் சென்றிருக்கிறார். அங்கு சென்று சாமி கும்பிட்டுவிட்டு வேறெங்க போகலாம்னு கேள்வியை வீசி விட்டு வண்டியை எடுக்க எத்தனிக்கும் போது
"இங்க பக்கத்துலதான் ஜடாயு தீர்த்தமும், காட்டு ராமர் கோவிலும் இருக்கு ஹிஸ்டாரிக்கல் பிளேஸ் இராமயணயத்துல இராவணன் சீதையை கடத்திட்டு போனது இங்க இருந்துதான். தெரியுமா?
வந்த எதிர் கேள்வியில் சுவாரஸ்யம் பல மடங்கு கூடி என்னப்பா சொல்ற போலாம் உடனேன்னு வண்டியை திருப்பினோம்.
ஜடாயு தீர்த்தம் |
சற்று குறுகலான சுற்றிலும் மரங்கள் சூழ்ந்த ஓரு பாதையில் செல்லும் போதே அணில்களின் குறுக்கு ஓட்டங்களும், அடர்ந்த வளர்ந்திருந்த மரங்களும் ஓரு காட்டுக்குள் செல்வது போன்ற தோற்றத்தை கொடுத்தது. அதிலிருந்து கொஞ்சம் தள்ளிப்போனால் ஓரு கோசாலை வருகிறது அதையும் தாண்டி சென்றால் முதலில் வருகிறது ஜடாயு தீர்த்தம். சென்றால் சிறிய கிணறு போன்ற அமைப்பும் அதையொட்டிய ஆறும் அதனுடன் இணைந்த சிறிய கோவிலும் அமைந்துள்ளது. அதாவது சீதையை இராவணன் கடத்தி செல்லும் போது ஜடாயு அவனுடன் போராடி வீழ்ந்து உயிருக்கு போராடி கொண்டிருக்கும்போது அங்கு வந்த இராமன் ஜடாயுவிற்கு தண்ணீர் தருவதற்காக அம்பால் உருவாக்கிய கிணறுதான் இது என்று இங்குள்ளவர்களால் நம்பப்படுகிறது. பிறகு ஜடாயு இறந்தவுடன் அவருக்கான ஈமகாரியங்களை சற்று தொலைவிலுள்ள சிவன் கோவிலில் செய்ததாகவும் நம்பிக்கைகள் நிலவுகின்றன. இங்கு மூன்று கிணறு போன்ற அமைப்புகளை ஜடாயு தீர்த்தம், இராம தீர்த்தம், சிவ தீர்த்தம் என அழைக்கிறார்கள். இதனருகிலேயே இருக்கிறது காட்டு இராமர் கோவில். இங்குள்ள ஆஞ்சனேயர் சிலை சுயம்பு என கூறுகிறார்கள்.
காட்டு இராமர் கோவில் |
இராவணன் இங்கிருந்துதான் சீதையை கடத்தியதாகவும், கடத்தும் போது நடந்த போரில் ஜடாயு வீழ்த்தப்பட்டு கிடந்ததாகவும் அப்போது இராமர் ஜடாயுவிற்காக உருவாக்கிய நீரூற்றுதான் இப்போது ஜடாயு தீர்த்தம் என அழைக்கப்படுவதாகவும் அங்கிருந்தவர்கள் சொன்னார்கள். மிக ஆச்சர்யமாக இருந்தது. இது உண்மையாக இருக்குமா? அல்லது உணமை மாதிரி நம்ப வைக்க பட்டிருக்கிறதா என. உண்மையாக இருந்தாலும், உண்மை மாதிரி நம்ப வைக்கப்பட்டிருந்தாலும் அது மிக ஆச்சர்யமானதுதான். எது எப்படியோ நான் அந்த அமைதியான சூழலுக்காகவே அடிக்கடி அங்கு போக ஆரம்பித்தேன்.
டிஸ்கி:
எனக்கு இறை நம்பிக்கை உண்டென்றாலும் அதை என் எழுத்தில் கொண்டு வர எப்போதும் விரும்பியதில்லை. இந்த பதிவும் மிகுந்த தயக்கங்களின் இடையேத்தான் எழுதுகிறேன். இது இந்த இடம் குறித்து நீண்டநாடகளுக்கு பின்தான் தெரிந்தது. என்னை போல சிலர் இருப்பதாலும், இது குறித்த விவாதங்களுக்கான ஓரு ஆரம்பமாகவும்தான் இந்த பதிவு.
படங்கள் உதவி: கூகுள்