Friday, May 10, 2013

லாலா கடை லட்சிய வேலை


பத்தாவது படிக்கும் போது பார்ட் டைமா ஒரு எஸ்டிடி பூத்தில் வேலை பார்த்து வந்தேன். டூட்டி டைம் வந்து மாலை 8-11 கல்லாவில் இருந்து கணக்கு முடித்து கடையை அடைக்க வேண்டும் மறுபடி காலை 7 மணிக்கு திறந்து 9மணிக்கு மாற்று ஆள் வரும் வரையில் இருக்க வேண்டும் சனி, ஞாயிறுகளில் புல் டே டூட்டின்னு பேசி வேலைக்கு போயிட்டு இருந்தேன் .

அப்பதான் என்னுடைய லட்சிய வேலையை நான் கண்டறிந்தேன்.. மூணுகடை தள்ளியிருந்த லாலா கடையில் வேலை பார்க்கும் இசக்கியை பார்த்தப்புறம்தான் எனக்குள் அந்த ஆசை. இசக்கி வெள்ளந்தியான பய.. நானு வேலைக்கு சேர்ந்த மொத நாளா வந்து சினேகமா விசாரிச்சான். லாலா கடையில மீந்து போன பலகாரத்தையெல்லாம் குடுத்து விடுவாங்க. வழக்கமா 9 மணிக்கெல்லாம் சவுண்ட் கொடுத்து கூப்பிடுற அண்ணாச்சி இன்னும் கூப்பிடலை.. எனக்கு பசிக்க ஆரம்பிச்சிது. கடையில வேற ரெண்டு பேரு… போன் பேசிட்டே இருங்காங்க..டக்னு டேபிள்க்கு அடில குனிஞ்சு போன் வயரை உருகி விட்டு லைன் டெட்ன்னு அவங்களை அனுப்பிட்டு லாலா கடைக்கு போனா… செம கூட்டம்… அண்ணாச்சிய மெதுவா கூப்பிட்டு என்னாச்சின்னு கேட்டா… 

இன்னைக்கு நல்ல வியாபாரம் தம்பி ஓண்ணும் மிஞ்சலை நாளைக்கு தாரேன் என்னன்னு சொல்றாரு
உள்ள எட்டி பார்த்தா.. இந்த இசக்கிபய அந்த நெய்முறுக்கை எடுத்து வாய்ல போட்டு பாட்டு படிச்சிட்டே… பார்சல் கட்டிட்டு இருக்கான். வெட்கத்தை விட்டு அண்ணாச்சிட்ட கேட்டேவிட்டேன்
… 
அண்ணாச்சி நெய்முறுக்காது ஒண்ணு குடுங்க பசிக்குன்னு

அண்ணாச்சி ஒண்ணுமே சொல்லலை.. அதனால திருப்பி கேட்டேன்.. இசக்கி மட்டும் திங்கான்.. எனக்கு மட்டும் இல்லேன்னு சொல்றியேலேன்னு

என்னாச்சின்னு தெரிய்ல புசுக்குன்னு கோவப்பட்டுட்டாரு.. லேய்…உனக்கெல்லாம் ஒரு தடவை சொன்னா புரியாதா போ..போயி உங்க ஓனர்ட்ட போயி கேளு.. எங்கடையில வேலை பாக்குற ஆளுக்கு மட்டும்தான் ஓசில இனி பலகாரம்னு.

பக்கத்து ஹார்டுவேர் கடையில வேலை பாக்குற மைக்கேலும் எண்ட்ட வந்து சொன்னான் இந்த இசக்கிபய மூணாப்புதாம்ல படிச்சிருக்கான்… ஆனா அவனுக்கு அடிச்ச யோகத்தை பாத்தியா.. டெய்லி நெய்முறுக்கு, அண்டிபருப்பு, பால்கோவான்னு ஸ்பெஷல் அயிட்டமாத்தான் சாப்பிடுவான்னான்.

அன்றிலிருந்து என்னுடைய குறிக்கோளே எப்பிடியாது சீக்கிரம் படிச்சு முடிச்சு ஓரு லாலா கடையில் வேலைக்கு சேர்ந்திரணும்ங்கறதாகத்தான் இருந்துச்சு. ப்ளஸ் டூ லீவுல அண்ணாச்சிட்ட கேட்டு வேலைல்லாம் ரெடி பண்ணி வச்சுருந்தேன் :))  வீட்டுக்கு தெரிஞ்சு கிடைச்ச ஏச்சுல அந்த ஆசையை மூட்டை கட்டி வச்சுட்டேன்.

2 comments:

அமுதா கிருஷ்ணா said...

ஆஹா என்ன ஒரு லட்சியம்..

கண்ணா.. said...

@அமுதா கிருஷ்ணா - நன்றிங்க :)