Friday, August 2, 2013

சிவில் இன்ஜினியர்


”இங்க என்ன நாயே வேடிக்கை போய் வேலைய பாரு”ன்னு சும்மா நின்னுட்டு இருந்த சித்தாளை ஏசிவிட்டு என் பக்கமா திரும்பி ”ஆளு சும்மா நிக்குறான் வேடிக்க பாத்துட்டு இருக்க… வேல வாங்க தெரியல… என்னத்த படிச்சு கிழிச்சியோ… வந்துட்டானுங்க நம்ம உயிர வாங்குறதுக்குன்னு” முகத்துக்கு நேரே காறி உமிழ்ந்தா மாதிரியான பேச்சு உடம்பையே அதிர வைத்தது.. தினமும் இதே கதைதான்… 

என்னையும் சேர்த்து மூணு அனுபவமில்லாத இன்ஜினியர் அந்த சைட்டில் ஜாய்ன் பண்ணியிருந்தோம். சீனியர்ஸ்ஸோட பொண்டாட்டி ஏசுனது, வீட்ல தண்ணி வராததது, மேலதிகாரி ஏசுனது போன்ற எல்லா பிரச்சனைக்கும் எங்களை ஏசுவதுதான் அவர்களுக்கு வடிகால் ரொம்ப என்ஜாய் பண்ணி இன்வால்வ்மெண்ட்டோட ஏசிட்டு இருந்தாங்க.  

ஒரு மாசம் அப்பிடியே ஓடுச்சு ஞாயிற்றுகிழமைகளில் கான்க்ரீட்க்கு தண்ணி நனைக்க கூட ஆள் இல்லாமல் நாங்களே பாக்க வேண்டியதாயிடுச்சு.. படிச்சு முடிச்ச உடனே வேலை போலாம் ஜாலியா இருக்கலாம்னு நினைச்சா… ஓய்வு ஒழிச்சல் இல்லாத வேலை இரவும் பகலும் வெயிலில் காய்ஞ்சு மண் படிஞ்ச தலையும் சிமெண்ட் கறை படிஞ்ச ட்ரெஸ்ஸுமாய் அலைஞ்சது எங்களை எப்பவாது கண்ணாடியில் பார்க்கும் போது ஜெர்க் கொடுத்துச்சு. ஒரு மாச வெயிலில் ஒரு கோட் தார் அப்பிய மாதிரி இருந்த முகத்தை எப்பவாது ரூமில் ப்ரியா இருக்கும் போது எடுத்து பார்த்து… அப்பவே எங்கம்மா சொல்லுச்சு சிவில் எடுக்காத…சிவில் எடுக்காதன்னு நாந்தான் கேக்காம தப்பு பண்ணிட்டேனு சொல்லி வச்சா போல எல்லாரும் ஒண்ணு போல புலம்புவோம்.

அப்பதான் என் கூட படிச்ச இன்னொரு பையன் எங்களை பார்க்க வந்தான் அவனும் ஒரு வேலையில் சேர்ந்து ஒரு மாதம் ஆயிருந்துச்சு. அவனை பார்த்ததும் எங்களுக்கு ஆச்சர்யம்.. கலர் குறையாமல் முன்னை விடவும் ஜொலித்தான். விசாரிச்சப்போ கம்யூட்டரில் மட்டும்தான் வேலை… அதுவும் எட்டு மணிநேரம்தான் ஆபிஸ் பூரா ஒரே பொண்ணுங்களா இருப்பாங்கன்னு சொன்னதை கேட்டு மத்த ரெண்டு பேரும் நைட்டே பொட்டிய கட்டி கம்பெனிய விட்டு எஸ்கேப். என் ப்ராஜெக்ட் மேனேஜர் மத்த ரெண்டு பேரும் ஓடினதை பார்த்து என் பெட்டிய தூக்கி மறைச்சு வச்சு என்னைய ஓடவிடாம தடுத்திட்டாங்க.

ரெண்டு வருஷம் ஏச்சு, புழுதி, ஏக்கம், அவமானம் எல்லாத்தோட அனுபவங்கள் தொழில் நுட்பங்கள்னு பல விஷயங்களை அந்த வேலை கத்து கொடுக்க ஆரம்பிச்சுது. கொத்தனார்கள்தான் என் ஆசிரியர்கள் நிறைய்ய விஷயங்களை எளிதாய்  புரியுற வகையில் சொல்லி கொடுத்தாங்க. 

இடையில் ஓடிப்போன நண்பர்களில் ஒருவர் சிவில் லைனை விட்டுட்டு வேற லைனில் மாறிவிட்டார். இன்னொருவர் வேற லைன் மாறி மீண்டும் சிவிலுக்கே வந்துவிட்டார். ஆனால் அத்தனை ஏச்சு பேச்சுக்களோட என்னை மாதிரியே அதை சகித்து வேலையை கத்து கொண்டவர்கள் மட்டுமே இப்ப நல்ல பதவிகளில் இருக்கிறார்கள். இதுதான் சரின்னுல்லாம் சொல்றதுக்கு எழுதலை. அதிஷா ப்ளஸ்ல இப்ப படிச்சு முடிச்சவஙக்ளோட வேலைக்கு முயற்ச்சி செய்யும் மனப்பான்மை குறித்து எழுதியதை படித்ததும் தோணியது இங்கும் பதிந்து வைக்கலாம்னு இந்த பதிவு.

Wednesday, July 17, 2013

GFRG demo building

முதலில் கீழே உள்ள சுட்டியில் ஜிஎஃப் ஆர் சி பயன்படுத்தி கட்டப்பட்ட பில்டிங்கற கீழே உள்ல வீடியோவை பார்த்தேன். ஆர்வம் அதிகமாகி இதை எப்படியும் நேரில் போய் பார்த்து எப்பிடி இவ்வளவு விலை குறைவாக கட்டுறாங்கன்னு பாக்கணும்னு நினைச்சேன். நீங்களும் முதல்ல வீடியோவை பார்த்துருங்க


அந்த ஆர்வத்தில் ஐஐடியில் கட்ட பட்டுள்ள ஜிஎஃப் ஆர் சி மாடல் பில்டிங்கிற்கு நேரில் சென்று பார்வையிட்டு வந்தேன். காஸ்ட் குறித்தும் மேல் விபரங்களை அங்க யாரிடமும் கேட்டறிய முடியவில்லை. கட்டிடத்தை பார்த்து விட்டு வந்தேன் கட்டத்தில் மாட்ட பட்டுள்ள தகவல் பலகையில் கீழ்கண்ட முக்கியமான விஷயங்கள் தெளிவாக குறிக்க பட்டிருக்கு ஆனா இதையே உட்டாலக்கடி பண்ணிய ஊடகங்கள் 1981 ச. அடி கட்டிடம் 6.5 இலட்ச ரூபாயில்னு கிளப்பி விட்ட எதிர்பார்ப்போடு கிளம்பிய எங்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அதில் குறிப்பிடபட்டுள்ள மிக முக்கியமான அந்த செய்திகள்



1.Total Buildup Area : 1981 sq.ft construction Cost @ 23 Lakhs

2.GFRG Panels sponsored by Rashtriya Chemicals and Fertilizers Limited (RCF) , Govt of India

3. Housed four typical flats: two for EWS (268 sq.ft carpet area) and two for LIG (497 sq ft)



அதாவது கட்டுமான செலவு 1981 ச.அடியில் நாலு வீடுகள் கட்டியிருக்கிறார்கள். இதற்கான கட்டுமான செலவு 23 இலட்சம் ஆனது எனவும் குறிப்பிட்டு இருக்கிறார்கள். ஜிஎஃப் ஆர் சி பேன் ஸ்பான்ஸர் பண்ண பட்டுள்ளது எனவும் குறித்திருக்கிறார்கள். அதற்கான காஸ்ட்டும் சேர்த்துதான் இந்த 23 இலட்சமா எனவும் தெரியவில்லை. குறிப்புகளின் படி பார்த்தால் ஸ்பான்ஸர் என குறிப்பிட்டிருப்பதால் அந்த பேனல் விலையை சேர்க்காமல்தான் 23 இலட்சம் ஆகியிருக்கும் என்ற யூகத்திற்கு வரவேண்டியிருக்கிறது. 

நல்ல முயற்சிதான் இது செங்கல் சுவர் மற்றும் பூச்சுமானத்திற்கு மட்டும் இந்த பேனல் மாற்றாக இருக்கும். மற்ற படி கட்டுமான செலவில் மிகபெரிய்ய மாற்றத்தை ஏற்படுத்தாது. கட்டுமான காலத்தை குறைக்கவும், பூச்சு, செங்கற்கட்டுக்கு ஆகும் மணல் பயன்பாட்டை குறைக்கவும் இது உதவும்.
 

Monday, July 15, 2013

சிங்கம் – II - என் பார்வையில்


பொதுவாக எனக்கு சில படங்கள் டிரைலர் பார்க்கும் போதே இது கண்டிப்பா செம மொக்கையா இருக்கும்னு தோணிய படங்கள் எல்லாமே அதுபோல மொக்கையாவே இருந்திருக்கு. மாறாக சில டிரைலர் பாத்து நல்லாருக்கும் போலயே நினைச்சு ஏமாத்தின படங்கள்தான் அதிகம். இதையே எப்பிடி சொல்லலாம்னா ஒரு சோறு பதமில்லாத எந்த பானையும் இதுவரையில் பதமாகவே இருந்ததில்லை.



ஆனால் சிங்கம் 2 மட்டும் விதிவிலக்கா இருக்கும்னு சில பாஸிட்டிவ் விமர்சனங்கள் படிச்சதும் தோணுச்சு. இருந்தாலும் படத்தை பார்க்காமல் எந்த முடிவுக்கும் வந்துற கூடாதுன்னு படத்தை பார்க்க போனேன்..

வாவ்… அட்டகாசம்.. ஸ்பீடான… ரசிகனை லாஜிக் பார்க்க விடாத பரபரப்பான திரைகதை, பேக் க்ரவுண்ட் ம்யூசிக்ன்னு செம  மிக்ஸிங். 80-90ஸ்ல விஜயகாந்த், அர்ஜுன் படங்கள் ஆக்‌ஷன் ரசிகர்களுக்கு விருந்தாக இருக்கும். அந்த இடத்தை இப்போ ஹரி புடிச்சுருக்காருன்னு தெரியுது.

சிங்கம் 1ல் பிரகாஷ்ராஜை கொன்றதும் ஆயுத கடத்தலை கண்காணிக்க தூத்துகுடியில் என் சி சி வாத்தியராக உளவு பார்க்க ஆரம்பித்து ஒரு ஜாதி கலவரம் ஏற்பட இருக்கும் தருணத்தில் மறுபடியும் போலிஸ் பதவிக்கு வந்து போதை பொருள் கடத்தல் நெட்வொர்க் ராஜாவை ஆப்பிரிக்காவில் போய் புடிச்சு வரும் சாதாரண கதையை திரைகதை மேஜிக்கில் கமர்ஷியல் ஹிட்டடிக்க வைத்திருக்கிறார் இயக்குனர் ஹரி.


அனுஷ்காவுக்கு வயசாயிடுச்சுன்னு விமர்சனம் எழுதறவங்கெல்லாம் அமலாபால், நஸ்ரியா கட்சிக்கு மாறிய துரோகிகளாகத்தான் இருக்கணும். எனக்கு இதிலயும் அனுஷ்க்காவை பிடிச்சிருக்கு.. அதுபோக ஸ்கூல் யூனிபார்ம்ல ஹன்சிகாவும் என் கண்ணுக்கு அழகாத்தான் தெரியுறாங்க (ரொம்ப காய்ஞ்சு கிடக்கேனோன்னு யாரும் தப்பா நினைக்க வேணாம்)
சந்தானம் காமெடி எனக்கு அவ்வளவா பிடிக்கலன்னாலும் அதுக்கு தியேட்டர்ல சின்ன பசங்கல்லாம் விழுந்து விழுந்து சிரிச்சதை பார்த்தா நமக்கு பிடிக்கலேன்னு சொன்னா வயசாயிடுச்சுன்னு பலர் நினைக்க வாய்ப்பிருப்பதால் பிடிச்சதாவே நின்னைச்சு நானும் ரெண்டு மூணு இடத்துல கைதட்டி சிரிச்சேன் (தியேட்டர்ல)


சூர்யாவுக்கு ஏழாம் அறிவு, மாற்றான் தோல்வியை சரிகட்ட வந்த கமர்ஷியல் ஹிட் என்பதை தவிர வேறு ஏதும் அதிகமா சொல்ல முடியவில்லை. நெட்வொர்க் ஜாமர் பயன் படுத்தி லாட்ஜ்ஜில் வில்லன்களை பிடிப்பது, சாயத்தண்ணீர் அடித்து கலவரகாரர்களை அடையாளம் கண்டு பிடிப்பதுங்கற மாதிரி சின்ன சின்ன புது விஷயங்களை காட்டி திரைகதையை சுவாரஸ்யமாகவே கொண்டு செல்கிறார்.


படம் பார்க்கும் போது கவனிச்ச முக்கியமான விஷயம் பொதுவா சூர்யாவிற்கு இதற்கு முந்தைய படங்களிலெல்லாம் பார்த்த வரையில் ஆண் ரசிகர்களை விடவும் பெண் ரசிகர்கள்தான் அதிகமாக இருக்கும்னு நினைக்குறேன். தியேட்டர் அதகளங்கள், ஆரவாரங்கள்ல்லாம் விஜய் அஜித் போல இவருக்கு இருக்காது.. ஆனா இதில் அதெல்லாம் தலைகீழா இருக்கு.. செம ரகளை தியேட்டர்ல…


மொத்தத்துல படம் நல்லாருக்கு எனக்கு பிடிச்சிருக்கு

Friday, May 10, 2013

லாலா கடை லட்சிய வேலை


பத்தாவது படிக்கும் போது பார்ட் டைமா ஒரு எஸ்டிடி பூத்தில் வேலை பார்த்து வந்தேன். டூட்டி டைம் வந்து மாலை 8-11 கல்லாவில் இருந்து கணக்கு முடித்து கடையை அடைக்க வேண்டும் மறுபடி காலை 7 மணிக்கு திறந்து 9மணிக்கு மாற்று ஆள் வரும் வரையில் இருக்க வேண்டும் சனி, ஞாயிறுகளில் புல் டே டூட்டின்னு பேசி வேலைக்கு போயிட்டு இருந்தேன் .

அப்பதான் என்னுடைய லட்சிய வேலையை நான் கண்டறிந்தேன்.. மூணுகடை தள்ளியிருந்த லாலா கடையில் வேலை பார்க்கும் இசக்கியை பார்த்தப்புறம்தான் எனக்குள் அந்த ஆசை. இசக்கி வெள்ளந்தியான பய.. நானு வேலைக்கு சேர்ந்த மொத நாளா வந்து சினேகமா விசாரிச்சான். லாலா கடையில மீந்து போன பலகாரத்தையெல்லாம் குடுத்து விடுவாங்க. வழக்கமா 9 மணிக்கெல்லாம் சவுண்ட் கொடுத்து கூப்பிடுற அண்ணாச்சி இன்னும் கூப்பிடலை.. எனக்கு பசிக்க ஆரம்பிச்சிது. கடையில வேற ரெண்டு பேரு… போன் பேசிட்டே இருங்காங்க..டக்னு டேபிள்க்கு அடில குனிஞ்சு போன் வயரை உருகி விட்டு லைன் டெட்ன்னு அவங்களை அனுப்பிட்டு லாலா கடைக்கு போனா… செம கூட்டம்… அண்ணாச்சிய மெதுவா கூப்பிட்டு என்னாச்சின்னு கேட்டா… 

இன்னைக்கு நல்ல வியாபாரம் தம்பி ஓண்ணும் மிஞ்சலை நாளைக்கு தாரேன் என்னன்னு சொல்றாரு
உள்ள எட்டி பார்த்தா.. இந்த இசக்கிபய அந்த நெய்முறுக்கை எடுத்து வாய்ல போட்டு பாட்டு படிச்சிட்டே… பார்சல் கட்டிட்டு இருக்கான். வெட்கத்தை விட்டு அண்ணாச்சிட்ட கேட்டேவிட்டேன்
… 
அண்ணாச்சி நெய்முறுக்காது ஒண்ணு குடுங்க பசிக்குன்னு

அண்ணாச்சி ஒண்ணுமே சொல்லலை.. அதனால திருப்பி கேட்டேன்.. இசக்கி மட்டும் திங்கான்.. எனக்கு மட்டும் இல்லேன்னு சொல்றியேலேன்னு

என்னாச்சின்னு தெரிய்ல புசுக்குன்னு கோவப்பட்டுட்டாரு.. லேய்…உனக்கெல்லாம் ஒரு தடவை சொன்னா புரியாதா போ..போயி உங்க ஓனர்ட்ட போயி கேளு.. எங்கடையில வேலை பாக்குற ஆளுக்கு மட்டும்தான் ஓசில இனி பலகாரம்னு.

பக்கத்து ஹார்டுவேர் கடையில வேலை பாக்குற மைக்கேலும் எண்ட்ட வந்து சொன்னான் இந்த இசக்கிபய மூணாப்புதாம்ல படிச்சிருக்கான்… ஆனா அவனுக்கு அடிச்ச யோகத்தை பாத்தியா.. டெய்லி நெய்முறுக்கு, அண்டிபருப்பு, பால்கோவான்னு ஸ்பெஷல் அயிட்டமாத்தான் சாப்பிடுவான்னான்.

அன்றிலிருந்து என்னுடைய குறிக்கோளே எப்பிடியாது சீக்கிரம் படிச்சு முடிச்சு ஓரு லாலா கடையில் வேலைக்கு சேர்ந்திரணும்ங்கறதாகத்தான் இருந்துச்சு. ப்ளஸ் டூ லீவுல அண்ணாச்சிட்ட கேட்டு வேலைல்லாம் ரெடி பண்ணி வச்சுருந்தேன் :))  வீட்டுக்கு தெரிஞ்சு கிடைச்ச ஏச்சுல அந்த ஆசையை மூட்டை கட்டி வச்சுட்டேன்.

Tuesday, May 7, 2013

சென்னை மெட்ரோ - கட்டுமான தொழில் நுட்ப அறிமுகம்

மெட்ரோ  வேலை நடைபெறுகிறதுன்னு அங்கங்க பேரிகேஷன் போர்டை சென்னை முழுதும் பார்த்திருப்பீங்க. அந்த பேரிகேஷன் போர்டுக்குள்ள என்னதான் பண்ணுறாங்கங்கறதை தெரிந்து கொள்ள ஓரு சின்ன அறிமுகமாக இந்த கட்டுரையை எழுத ஆரம்பித்திருக்கிறேன்.

45 கிலோ மீட்டருக்கு அமையவிருக்க்கும் இந்த மெட்ரோ இரயிலின் கட்டுமான காலம் நான்கு வருடம் என கணக்கிட்டிருக்கிறார்கள். மிகநெருக்கமாக மற்றும் ட்ராபிக் அடர்த்தி மிகுந்த சென்னை போன்ற ஏரியாக்களில் நான்கு வருட கட்டுமான காலம் என்பது சாத்தியமில்லாதது. அதனால் ஊருக்கு வெளியே வளரும் நகரங்களில் மட்டுமே இது போன்ற திட்டம் சாத்தியமானது என்கிற நிலையை மாற்றிய நவீன கட்டிட தொழில் நுட்பத்தை பற்றிய ஒரு பார்வையை முழுவதுமாக முடியாவிட்டாலும் ஒரளவிற்காவது பதிவு செய்யலாம் என்ற எண்ணமே இந்த கட்டுரை.

சென்னை மெட்ரோ - குறிப்புகள்

தற்போது கட்டப்பட்டு வரும் சென்னை மெட்ரோ இரண்டு வழித்தடங்களாக தீர்மானித்து முதல் வழித்தடத்தில், வண்ணாரப் பேட்டையிலிருந்து சைதாப்பேட்டை வரை 14.3 கி.மீ் தூரம் சுரங்கப்பாதையாகவும் மீதமுள்ள பகுதி உயர்த்தப்பட்ட பாதையாகவும் இருக்கும்.  இரண்டாவது வழித்தடத்தில் சென்னை சென்ட்ரலில் இருந்து அண்ணா நகர் இரண்டாவது நிழற்சாலை வரை 9.7 கி.மீ தூரம் சுரங்கப்பாதையாகவும் மீதமுள்ள பகுதி உயர்த்தப்பட்ட பாதையாகவும் அமைக்கப்படவுள்ளன.

மெட்ரோ இரயில் வழித்தடம் தொலைவு  வழித்தட விவரங்கள்:
மெட்ரோ இரயில் வழித்தடம்
தொலைவு
வழித்தட விவரங்கள்:
வழித்தடம் - 1

வண்ணாரப்பேட்டையிலிருந்து விமான நிலையம் வரை
23.1 கி.மீ.
வண்ணாரப் பேட்டை -பிராட்வே (பிரகாசம் சாலை) - சென்னை சென்ட்ரல்-ரிப்பன் மாளிகை - கூவம் கரை ஒரமாக - அரசினர் தோட்டம்-தாராப்பூர் கட்டிடம்-ஸ்பென்ஸர்ஸ்-ஜெமினி-அண்ணா சாலை-சைதாப்பேட்டை - கிண்டி-சென்னை விமான நிலையம்.
வழித்தடம் - 2

சென்னை சென்ட்ரலில் இருந்து புனித தோமையர் மலை வரை
22 கி.மீ.
சென்னை சென்ட்ரல் - .வே.ரா பெரியார் சாலை வழியாக வேப்பேரி - கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி - அமைந்தக்கரை - ஷெனாய் நகர் - அண்ணாநகர் கிழக்கு - அண்ணாநகர் இரண்டாவது நிழற்சாலை - திருமங்கலம் - கோயம்பேடு பேருந்து நிலையம் - ஜவகர்லால் நேரு சாலை வழியாக - வடபழனி - அசோக்நகர் - சிட்கோ - ஆலந்தூர் - புனித தோமையர் மலை.
மொத்தம்
45.1 கி.மீ.






அலைன்மெண்ட் மேப்


கட்டுமான தொழில்நுட்பம்

     இது போன்ற நெருக்கடியான இடங்களில் கட்டுமானத்தை கட்ட மிக முக்கியமாக கடைபிடிக்க வேண்டிய விதி, reduced cast in situ, increase precast structure என்பதுதான். அதாவது  தேனாம்பேட்டையில் நடக்குற வேலைக்கு திருநீர்மலையில் இடம் பிடிக்குறதுங்கற பாணியில் அதே இடத்தில் வைத்து செய்ய வேண்டிய வேலைகளை குறைத்து வேறு இடத்தில் கட்டமைப்பு செய்து உதிரிபாகங்களாக கொண்டு வந்து பொருத்தும் வேலையை மட்டும் செய்தால் ஆன் சைட் நெருக்கடி காலத்தை குறைக்கலாம். இப்போது நடைபெற்று கொண்டிருக்கும் மெட்ரோ பணியிலும் ஐம்பது சதத்திற்கும் மேல் ப்ரீகாஸ்ட் முறையில் திட்டமிடபட்டு ஆன்சைட் நெருக்கடியை வெகுவாக குறைத்திருக்கிறார்கள்.

     சென்னை மெட்ரோவில் இரண்டு வகையான தடம் & ஸ்டேஷன் அமைக்க இருக்கிறார்கள்
1.   உயர்த்தபட்ட தடம்  (Elevated Track)
2.   சுரங்க தடம்        (Underground Tunnel)

1.   உயர்த்தபட்ட தடம் (Elevated Track)

கட்டுமானத்தின் முக்கியமான பாகங்களை கீழே குறிப்பிட்டிருகிறேன்.

·         பைல் & பைல் கேப்
·         பியர்
·         பியர் கேப்
·         செக்மெண்ட்ஸ்
·         ஹேண்ட்ரெய்ல்
இவற்றில் பியர் கேப் வரையில் ஆன்சைட் முறையிலும் செக்மெண்ட்ஸ் ஆப்சைட்டில் வேறு ஏதாவது ஒரு இடத்தில் ப்ரிக்காஸ்ட்டாக உருவாக்கப்பட்டு கட்டுமான இடத்தில் லாஞ்சிங் கர்டர் துணைகொண்டு இணைக்க்க படுகிறது. இதன் மிக முக்கியமான நன்மை என்னவென்றால் பில்லர் அமைக்கும் இடத்தை மட்டும் வேலை செய்ய உகந்தவாறு அகலமாக எடுத்து கொண்டு  மற்ற இடத்தில் மிககுறைந்த அளவில் ஏற்கனவே இருக்கும் வாகன பாதைக்கு அதிக பாதிப்பு ஏற்படுத்தாது அமைக்கலாம்.

ட்ராக்கில் ஓவ்வொரு 25 – 30 மீட்டருக்கு ஒரு பில்லர் அமைத்து அதன் சப்போர்ட்டில் ட்ராக் செக்மெண்ட்ஸை அமைக்கிறார்கள். இதில் நவீனகட்டுமான யுக்தியான ப்ரீகாஸ்ட் முறையில் நகரின் நெரிசல் குறைந்த திருநீர்மலை போன்ற பகுதிகளில் காஸ்டிங்க் யார்டு அமைக்கப்பட்டு கோயம்பேடு போன்ற நெரிசல் மிகுந்த பகுதிகளில் இணைக்கபடுகிறது. இந்த இன்ஸ்டலேஷன் லாஞ்சிங் கர்டர் எனும் இயந்திரத்தின் துணை கொண்டு நடைபெறுகிறது


லாஞ்சிங் கர்டர் முறையில் இணைக்கப்படும் ட்ராக் ஆனது இரண்டு ட்ராக்கினை கொண்டுள்ளது. இரண்டு இரயில்கள் ஓரே நேரத்தில் செல்லும்படியான அமைப்பில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பில்லர் வரை மட்டுமே காஸ்ட் இன் சிட் முறையில் செய்யப்படுவதால் ஸ்டேஷன் தவிர்த்து இதற்கு தேவைப்படும் அகலம் 10 மீட்டர் மட்டுமே.

கோயம்பேட்டிலிருந்து வடபழனி, அசோக்நகர் & கிண்டி வழியாகச்செல்லும் வழித்தடம் முழுவதும் எலிவேட்டட் ட்ராக் ஆகவே வடிவமைக்க பட்டுள்ளது. ட்ராக் செக்மெண்ட்ஸ் 1.2 மீட்டர் நீளமாக பிரித்து பிரித்து காஸ்டிங்க் யார்டில் உருவாக்கபடுகிறது. காஸ்டிங்க் யார்டில் செய்வதால் ஏற்படும் வசதி என்னவென்றால் தரமான காங்கிரீட்டை போடுவதோடு தரச்சான்றின் போது ஏதேனும் குறைபாடு காணப்பட்டால் ஆன்சைட் முறையை போல் ரெட்டிபிகேஷன் முறைக்கு மாறாமல் அந்த பாகத்தையே முழுவதும் நிராகரித்து.. மீண்டும் தரமான புதிய பாகத்தை உருவாக்கி பயன்படுத்த முடியும்.

அண்டர் க்ரவுண்ட் டனல் (சுரங்க பாதை)





மிக நெரிசல் மிகுந்த அண்ணா சாலை போன்ற ஏரியாக்களில் ஸ்டேஷன் அமைய இருக்கும் இடங்களில் மட்டும் தோண்டி டனல் போரிங் மெஷின் (TBM) எனும் இயந்திரத்தின் உதவி கொண்டு மிகப்பெரிய கட்டிடங்கள் நிறைந்த பகுதியில் பூமிக்கடியில் 40 அடிக்கு கீழே இந்த சுரங்கபாதை அமைக்கப்படுகிறது. பேர்ரிகேஷன் போர்டு போடாத இடங்களில் கீழே என்ன வேலை நடைபெறுகிறது என தெரியாமலேயே பயணித்து கொண்டிருக்கிறோம்.
ஸ்டேஷன் அமைய இருக்கும் நேருபார்க், மே டே பார்க போன்ற இடங்களில் முதலில் TBM மெஷினை இறக்க லாஞ்சிங் சாஃப்ட் அமைக்கப்பட்டு வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மெஷின்களை தோண்டுவதற்கு தயாரான நிலையில் வைக்கிறார்கள். இது சுரங்கப்பாதைக்காக தோண்டிகொண்டே செல்ல செல்ல காஸ்டிங் யார்டில் இருந்து உற்பத்தி செய்து கொண்டுவரப்பட்ட டனல் ரிங்கை உடனேயே பொருத்தி சுற்றியுள்ள மண் டனலை பாதிக்காமல் பாதுகாக்கிறது.
டனல் தோண்டப்படும் ட்ராக்களின் அருகில் உள்ள கட்டிடங்களை முன்ஆய்வு செய்து பில்டிங் கன்டிஷன் சர்வே ரிப்போர்ட்டில் படங்களுடன் சமர்பித்து விடுகின்றனர். பிறகு மெட்ரோ பணியினால் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் அதனை சரிசெய்து தரும் பொறுப்பும் அந்ததந்த ஒப்பந்தகாரரையே சேரும்.
ட்வின் டனலாக இரண்டு ட்ராக்குகளை தோண்டி பராமரிப்பு பணிக்காக இரண்டையும் இணைக்கு முன்னூறு மீட்டருக்கு ஓன்று எனும் கணக்கில் க்ராஸ் பேசேஜ் எனும் அமைப்பை ஏற்படுத்துகிறார்கள். இது தவிர இது முக்கியமான வடிவமைப்பாக TVS & ECS சிஸ்டத்தை கருதுகிறார்கள்.
TVS (Tunnel Ventilation System) – டனலிள் தேவைப்படும் வெண்டிலேஷனை வழங்கவும் மேலும் அதை கட்டுப்படுத்தவும் பயன்படுத்தபடுகிறது.
ECS (Enviornmet Control System) – டனலிள் தேவைப்படும் வெப்பநிலையை கட்டுபடுத்த பயன்படுத்த படுகிறது. ஏதேனும் தீவிபத்து போன்ற அசம்பாவிதம் நடந்தால் நிலைமையை உடனடியாக கட்டுக்குள் கொண்டுவரவும் இந்த அமைப்பு பயன்படுகிறது.



அண்டர்க்ரவுண்ட் மெட்ரோ ஸ்டேஷன்

அண்டர்க்ரவுண்ட் ஸ்டேஷனை பொறுத்த வரையில் டாப் டவுன் எனும் முறையில் கட்ட திட்டமிடுகிறார்கள். அதாவது முதலில் டயாப்ரம் வால் எனும் சுவர்களை சுற்றி நிருவி விட்டு மேலிருந்து தோண்ட ஆரம்பித்து முதல் லெவல் ஸ்லாப் வரை தோண்டுகிறார்கள். பிறகு அந்த ரூப் ஸ்லாபை கட்டி முடித்து.. ஆங்காங்கு விடப்படும் கட் அவுட் எனும் ஓப்பனிங்க் வழியாக எக்ஸவேட்டர் இயந்திரத்தை இறக்கி மேலும் கீழே அடுத்த லெவல் ஸ்லாப் வரை தோண்டுகிறார்கள். பின அந்த ஸ்லாபை கான்க்ரீட் போட்ட பிறகு அதற்க்கும் கீழ் தோண்ட ஆரம்பிக்கிறார்கள். கீழே உள்ள படத்தில் விளக்கப்பட்டுள்ளன.



டெல்லி மற்றும் பெங்களூரு மெட்ரோவின் வேலை முடிவடைந்த படங்கள் இணையத்தில் எடுத்தவைகள் உங்கள் பார்வைக்கு



தகவல் திரட்டப்பட்ட தளசுட்டிகள்


மேலும் சில மெட்ரோ தொடர்புடைய பதிவுகள்