Monday, March 29, 2010

வீரபாண்டியன் IAS ஐ பதிவுலகிற்கு வரவேற்போம்

கடந்த வருடம் மே மாதம் ’’ வீரபாண்டியன் IAS - வறுமையை தாண்டிய போராட்டம்...!! புரோட்டா கடையிலிருந்து ஓரு IAS.. !! சாதித்த சட்ட கல்லூரி மாணவர்...!! ’’ என்று ஓரு பதிவிட்டு இருந்தேன். அந்த பதிவை படித்து விட்டு இதை தொடருமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.படிக்கும் போது வறுமையின் காரணமாக புரோட்டா கடையில் பகுதி நேரமாக வேலையும் பார்த்து கொண்டு ப்ளஸ் டூவில் மாநில அளவில் ரேங்க் எடுத்ததோடு மட்டுமில்லாமல் IAS ஆகி ஏழை எளிய மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதை இலட்சியமாக கொண்டு அதனை சாதித்தார். ஆம் IAS தேர்வில் அகில இந்திய அளவில் 53வது இட்த்தை பிடித்தார். வறுமையை தாண்டிய அவரின் போராட்டம் என்னை கவர்ந்ததால் அவ்வாறு பதிவிட்டிருந்தேன். அதன் பிறகு ஆனந்த விகடனில் அவரின் காதல் திருமணம் குறித்து போட்டிருந்த்தை படித்த்தும் சரியான ஆளை பற்றிதான் எழுதியிருக்கிறோம் என நினைத்து கொண்டிருந்தேன். ஏனெனில் காதலுக்காகவும் மனிதர் பல ஆண்டுகள் போராடி வென்றிருக்கிறார்.





இரண்டு நாள்களுக்கு முன்னால் அதே வீரபாண்டியன் IAS யிடம் இருந்து “intha seithiyai veliyittorukkum matrum vaazhthu therivitha anaivarukkum nenchaarntha nanrikal” என்று ஓரு பின்னூட்டம் வந்திருந்தது. பார்த்தவுடன் ஆச்சர்யம் தாங்க முடியவில்லை. எப்போதும் மொக்கைகளையே எழுதி கொண்டிருக்கும் எனது ப்ளாக்கில் எப்போதாவது இது போல எழுதுவேன். அதற்கும் மொக்கைகளுக்கு உரியதை விட குறைந்த வரவேற்பே இருக்கும். ஆனால் ஓரு வருடம் கழித்தும் இது போல பதிவுகள் கவனிக்கப்படும் எனத்தெரியும் போது உருப்படியான விஷயங்கள் அடிக்கடி எழுதலாம் எனத்தோன்றுகிறது. அப்போதெல்லாம் இது போன்ற பதிவுகளுக்கும் தொடர்ந்து வந்து என்னை ஊக்கமூட்டிய நண்பர்கள் வினோத் மற்றும் கிஷோருக்கும் இந்நேரத்தில் என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

வீரபாண்டியன் IAS ம் பதிவு எழுத ஆரம்பித்து இருக்கிறார். இரண்டு பதிவு ஆரம்பித்து இருந்தாலும் ஓரு பதிவில் தான் எழுதியிருக்கிறார். அவருடைய பதிவின் முகவரி http://veerapandiang.blogspot.com/ தேர்தலை குறித்து சிறிய கவிதையொன்றை எழுதியிருக்கிறார். வறுமையை தாண்டி போராடிய ஓருவர் பதிவு எழுத ஆரம்பித்து இருக்கிறார். அவரை நாம் ஊக்குவிப்போம். இது அவரின் புரோபைல் பக்கத்தின் ஸ்கிரீன் ஷாட்.


தொழில் சமூகசேவை என குறிப்பிட்டு இருக்கிறார். பதிவுலகிற்கு அவரை வரவேற்போம். இவரை போன்றவர்கள் தொடர்ந்து ஆர்வமுடனும், தொடர்ந்த ஊக்கத்துடனும் உழைக்கும் போதுதான் சமூகத்தில் வறுமையோடு போராடி கொண்டிருக்கும் பல பேருக்கு நம்பிக்கை குறையாமல் இருக்கும்.

Monday, March 22, 2010

பத்து பெண்களாஆஆஆஆ......!!!!! தொடர்பதிவு...

என்னை இந்த தொடர்பதிவிற்கு அழைத்த அன்பு நண்பர் பிரபுவிற்கு நன்றிகள் பல. பிடித்த பெண்கள் பத்து பேரை மட்டும்தான் சொல்ல வேண்டும், சொந்தகாரர்களை சொல்ல கூடாது என்ற கட்டுப்பாடுகளை மட்டும் கடைபிடிக்கிறேன்.

பிடித்த பத்து பெண்கள் என்ற இப்பதிவை என்னை பெற்று, வளர்த்து, சமூகத்தில் போராட எல்லா மனவலிமையையும் குணங்களாக எனக்கு தந்த என் அம்மாவிற்கு சமர்ப்பிக்கிறேன்.

சாதனை பெண்கள் குறைவாக உள்ளார்களே.. நிறைய பேரின் தொடர் பதிவில் திரும்ப திரும்ப ஒரே பெயர்களே வருகிறதே என நண்பர்கள் சிலர் வருத்தப்பட்டனர். ஆமாம் உண்மைதான் பெண்களெல்லாம் ஆண்கள் வெற்றிக்கு உறுதுணையாக இருந்ததாலே அவர்கள் வெளிச்சத்திற்கு வரவில்லை. நீங்கள் எந்த சாதனையாளர்களை வேண்டுமானாலும் எடுத்து கொள்ளுங்கள். அவர்கள் ஓன்று பெண்களாக இருப்பார்கள், அல்லது வெற்றி பெற்ற ஆண்களின் பின்னால் இருப்பார்கள். அப்படி உங்களின், என்னின் வெற்றிக்கு உறுதுணையாக இருக்கும் அனைத்து பெண்களுமே சாதனையாளர்கள்தான்.

இதையெல்லாம் தாண்டி பிரபலமான, எனக்கு பிடித்த பத்து பெண்களின் தொகுப்பு கீழே.

செல்லம்மாள் பாரதி


மகாகவி பாரதியாரின் மனைவி. ஊர் உலகிற்கெல்லாம் பெண் விடுதலை, சமூக புரட்சி என உரக்க சொன்னவரின் வீட்டை கட்டிகாத்தவர். வீட்டில் சமைக்க அரிசியில்லாமல் அக்கம் பக்கத்தில் கடன் வாங்கி வைத்த அரிசியை கூட பாரதி குருவிக்கு கொடுக்கும் போதும் பொறுமையாக அறிவுருத்திய பெண்மணி. இது போன்ற பல சம்பவங்களை கேள்வி பட்டதில் இருந்து எனக்கு பாரதியாரின் படங்களை பார்க்கும் போதெல்லாம் அவரின் வெற்றிக்கு காரணமான செல்லம்மாள்தான் நினைவிற்கு வரும்.

நளினி முருகன்


காதல் கணவனுக்காக கடுமையான ஜெயில் வாழ்க்கையையே திருமணப் பரிசாக ஏற்று இன்னமும் அவரின் மேல காதல் குறையாமல் வாழும் இவரின் மன உறுதிக்காகவே இவரை எனக்கு மிகவும் பிடிக்கும்

சோனியாகாந்தி


தான் வளர்ந்த தேசத்தை விட்டு இந்தியாவில் வாழ்வது பெரிய விஷயம்தான் திருமணத்திற்கு பின் இந்தியராக வாழ்ந்தது மட்டுமல்லாமல் தன் காதல் கணவன் மறைவிற்கு பிறகும் இந்தியராகவே வாழ்ந்து அசத்துகிறார். காதலுக்காக தன் நாட்டையே உதறி தள்ளிய, தனக்கு வந்த பிரதமர் பதவியையும் உதறிய இவரை பார்த்தால் வியப்புதான் வருகிறது

டி.பி.ராஜலெட்சுமி

தமிழில் முதல் பெண் இயக்குனர். 1936 ல் மிஸ். கமலா என்ற திரைப்படத்தையும் பின்பு 1938ல் மதுரைவீரன் படத்தையும் இயக்கியுள்ளார் (நன்றி அய்யனார் – இந்த தகவல் அவரின் பதிவில் இருந்துதான் தேடி எடுத்தேன்)

சி. வி. திலகவதி


சதர்ன் ரயில்வேயின் முதல் பெண் ஓட்டுனர். உலகின் மிகப்பெரிய ரயில்வே நெட்வொர்க்கில் முதல் பெண் ஓட்டுனர் என்றாலும் வரும்காலத்தில் நிறைய பெண் ஓட்டுனர்கள் வருவதற்கு உந்து சக்தியாக இருக்கிறார்.

சாவித்திரி


தர்மபுரியை சேர்ந்த இவர் சென்னை மாநகர பேருந்தில் ஓட்டுநராக பணிபுரிகிறார். கடினமான வேலைகளுக்கு பெண்கள் வரமாட்டார்கள் என்ற மாயையை இவர், திலகவதி மற்றும் பல பெண் ஆட்டோ ஓட்டுனர்கள் நிருபித்து வருகிறார்கள்.

கவிஞர் தாமரை


எனக்கு இவரின் திரைபடபாடல்களில் இவரை பிடித்ததை விடவும், கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது தமிழ் ஈழத்திற்கு ஆதரவாக நடந்த கூட்டத்தில் இவரின் பேச்சை கேட்டு இவரின் ரசிகன் ஆனேன். என்னா பேச்சு அது...!! ஸான்ஸே இல்லங்க... இப்ப கேட்டாலும் கைதட்ட தோணும்

சானியா மிர்சா


விளையாட்டு துறையில் இந்தியாவில் மிகபிரபலமான பெண் டென்னிஸ் வீராங்கனையாக இவர் உருவெடுத்த விதம் ஆச்சர்யமானது. ஆனால் அதற்கான இவரின் உழைப்புதான் என்னை கவர்ந்த்து.

ராதிகா


ராடான் மீடியா எனற நிறுவனத்தை வெற்றிகரமாக நட்த்தி வருபவர். இந்த துறையில் ஆண்களே நிறுவனத்தை நட்த்த திணறிவரும் இக்காலத்தில் வெற்றிகரமாக நடத்தி, பெண்களால் ஆண்களை விடவும் வெற்றிகரமாக செயல்படமுடியும் என நிருபித்து வருபவர்

ஜெயலலிதா


இவரின் தைரியத்திற்காக பிடிக்கும். தமிழகத்தின் மிகப்பெரிய கட்சியை ராணுவ கட்டுகோப்புடன் வழிநடத்தும் ஆளுமைதிறன், நிர்வாகத்திறன் எனக்கு இவரிடம் மிகவும் பிடித்தது.

இந்த தொடர்பதிவை தொடர விரும்புவர்கள் பின்னூட்டத்தில் தெரிவியுங்கள்.


Tuesday, March 16, 2010

வாஸ்து மூலைகளும் மனித மூளைகளும்



சூரிய வெளிச்சம், காற்று போன்றவற்றை தேவையான அளவு வீட்டிற்குள் கொண்டு வருவதே வாஸ்து சாஸ்திரத்தின் அடிப்படையாக இருந்து வந்திருக்கிறது. அதையே வாஸ்து பகவான் தன் தலையை ஈசான்ய மூலையிலும் (வடகிழக்கு) கால் பகுதியை கன்னி மூலையிலும் (தென் மேற்கு) வைத்து குறுக்காக படுத்திருப்பதாக கூறி ஒரு வரைமுறைகளை வகுத்து பின்படுத்த அறிவுறுத்தினர்.  பழைய காலங்களில் மக்களின் வாழ்வு முறையையும் தட்ப வெப்ப நிலையையும் கருத்தில் கொண்டு வரையறுக்கப்பட்ட விதிமுறைகளை எவ்வளவோ காலங்கள் கடந்தும் மக்களின் வாழுவு முறைகள் பெரும்பாலும் மாறிவிட்ட நிலையிலும் அதை பயன்படுத்த நினைப்பதை விட முட்டாள்தனமான செயல் வேறு இருக்க முடியாது. இது இந்த காலத்தில் செடி கொடிகளை உடைகளாக பயன்படுத்துவதற்கு சமமான டிராஜடி.


இதை விடவும் பெரிய காமெடி மனையடி சாஸ்திரத்தையும் இதில் புகுத்தி இந்த அளவுதான் இருக்க வேண்டும் என பயமுறுத்துவது. மனையடி சாஸ்திரத்தில் ஓரு அடி என்பது வீட்டு தலைவனின் காலடி என தெளிவாக குறிக்கப் பட்டுள்ளது. அந்த வீட்டு தலைவரின் காலடி அளவிற்கு ஓரு தச்சு செய்து அதை கொண்டுதான் நீள அகலம் குறித்து விவரிக்கப்பட்டுள்ளது. இப்போது பொதுவான டேப் அளவு வந்து விட்ட்தால் இதன் அடிப்படையே மாறி விடுகிறது. ஆனால் அதை வைத்து காசு புடுங்கும் கும்பலை பார்த்தால் ஆச்சர்யமாக வருகிறது. ஆதாரமோ, நிருபணமோ இல்லாமல் அப்பாவிகளின் குழப்பமான நிலையை பயன்படுத்தி எப்படியெல்லாம் சம்பாதிக்கிறார்கள். இவர்களது இந்த திறமையெல்லாம் வேறெதிலாவது காட்டினால் இந்தியா இந்நேரம் வளர்ச்சியடைந்த நாடுகளின் கூட்டத்தில் சேர்ந்திருக்குமே எனத்தோன்றுகிறது

வாஸ்து மூலைகளும் மனித மூளைகளும்


அக்னி மூலை – தென் கிழக்கு

அக்னிமூலையில்தான் அடுப்பு இருக்க வேண்டும் என வாஸ்து கூறுகிறது. அந்த காலத்தில் விறகு அடுப்புதான் பயன்படுத்தினார்கள். அச்சமயத்தில் வெப்பம் வீட்டிற்குள் அதிகம் வராமல் இருக்கவும், தீ அணையாமல் நன்றாக எரியவும் காற்றின் திசைகேற்ப தென்கிழக்கில் சமையறை அமைத்தார்கள். நவீன யுகத்தில் கேஸ் அடுப்பை பயன்படுத்தும் காலத்திலும் அதையே சொல்லி காசு பறிக்கும் கும்பலை என்ன செய்யலாம்.?

ஈசான்ய மூலை – வட கிழக்கு

மனையில் ஈசான்யமூலைதான் சுத்தமாகவும், தண்ணீர் தொட்டி போன்றவைகளும் இருக்க வேண்டும் என வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. மழை நீர் வடிவதற்கு வாகாகவும், தண்ணீர் வழிந்தோட ஏதுவாகவும் இந்த மூலையானது மற்ற மூலைகளை விட பள்ளமாக இருக்க வேண்டும் என வரையறுக்க பட்ட்து. தண்ணீர் இருக்க வேண்டும் என்பதற்காக மீன் தொட்டிகளையெல்லாம் விற்பனை செய்து வருகிறார்கள்

கன்னிமூலை – தென்மேற்கு

தென்மேற்கு மூலைதான் மேடாக இருக்க வேண்டும் என வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. இந்த மூலை மேடாக இருந்தால்தான் இதற்கு நேரேதிர் மூலையான ஈசான்யத்திற்கு தண்ணீர் வழிந்தோட வசதியாக இருக்கும். இதையே சொல்லி ஓவர் ஹெட் டேங்க் கூட கன்னிமூலையில்தான் இருக்க வேண்டும் என கூறி வருகிறார்கள்.

வாயு மூலை – வடமேற்கு

வாயு மூலையில்தான் கழிவு நீர் தொட்டிகள் அமைய வேண்டும் என வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. இதுவும் ஈசான்ய மூலைக்கு சொன்ன மாதிரிதான் நீர் வழிந்தோட ஏற்ற வகையில் ஈசான்ய மூலையில் தண்ணீர் தொட்டியும் வாயு மூலையில் கழிவு நீர் தொட்டியும் அமைய வேண்டும் என அறிவுறுத்துகிறது. தற்போதைய பைப்பிங் சிஸ்டம் மூலம் நமக்கு வேண்டிய இடங்களில் வாட்டம் கொடுத்து விடலாம் என்பதால் இதுவும் இங்கு தேவையில்லாமல் போகிறது.

எந்தெந்த மூலையில் என்னென்ன அறைகள் வரலாம் என்பதை குறிக்கும் வாஸ்து வரைபடம் கீழே



மேலே குறிப்பிட்டதும் கூட வாஸ்துவை காட்டி இவர்களாக வரைந்தவைதான். நமக்கு என்ன தேவையோ, எது வசதியோ அதை கருத்தில் கொண்டு வீட்டை அமையுங்கள். மற்றபடி வாஸ்து பயமுறுத்தல்கள் எல்லாம் இந்த மெயிலை 100 பேருக்கு பார்வேர்ட் செய்யாவிட்டால் அவ்வளவுதான் என வரும் மெயிலுக்கு சமானம்தான்


= = =
 இந்த சுட்டியில் பார்த்த சில பயமுறுத்தல்கள்

”இயற்கையாகவே தென்கிழக்கு (அக்னி) மூலையில் நீராதாரங்கள் இல்லாமல் இருப்பது நல்லது. அப்படி நீராதாரங்கள் இருந்தால் அந்த வீட்டில் தங்கியிருப்பவர்களுக்கு அடிக்கடி நோய் தாக்குதல் ஏற்படும். வீட்டிற்குள் சிறிய மருந்துக்கடை நடத்த வேண்டிய நிலை வரலாம். அக்னி மூலை பாதிப்பு காரணமாக ஒரு சிலருக்கு வாரிசு இல்லாமல் போகலாம்”

“சில வீடுகளில் ஆண் சந்ததியே இல்லாமல் இருப்பதும் உண்டு. அதற்கு அந்த வீட்டின் ஈசானிய மூலையை அடைத்து வைத்திருப்பதே முதன்மைக் காரணமாக இருக்கிறது. இதன் காரணமாக வீட்டில் உள்ளவர்கள் அடிக்கடி நோய்வாய்ப்படுவதும் உண்டு”

= = =

மனையில் நல்ல காற்றோட்டம் வரும் வகையில் வீட்டை அமையுங்கள். நன்கு உழையுங்கள் நல்ல பலன்கள் தேடி வரும்.

Wednesday, March 10, 2010

சாரு பெரியாரிஸ்டா – ஜுவி காமெடி

இவ்வார ஜுனியர் விகடனில் வெளிவந்த சாரு பேட்டியை விட அவரை குறித்த ஜுவியின் அறிமுகம்தான் பயங்கர சிரிப்பை வரவழைத்த்து. சாருவை பெரியாரிஸ்ட் என அறிமுகப் படுத்தி சிரிப்பு மூட்டி இருந்த்து. எந்த பெரியாரிஸ்ட் சாமியாருக்கு சொம்பு தூக்கியிருக்கிறார். கொஞ்சம் கூட விவஸ்தையே இல்லாமல் இந்த அடைமொழியை கொடுத்திருக்கிறார் ஜுவி நிருபர்.



இதில் வழக்கம் போல் சாரு சரவெடி காமெடிகளை உதிர்திருக்கிறார். இதுவரை நாலாயிரம் ஏமாந்தேன் என்றவர் இப்போது அவர் இருபத்து ஐந்தாயிரமும் அவர் மனைவி ஒரு இலட்சமும் ஏமாந்து இருக்கிறார் என கூறுகிறார்.

யோவ் நித்தி ஒழுங்கா இப்பவே உண்மையை ஒத்துக்கோ...இல்லேன்னா போக போக அமெளண்ட் ஏறிரும்.

அவரின் அந்த கேள்வியும் பதிலும் கீழே.

கேள்வி:

'நீங்கள் சாமியாரிடம் பணம் வாங்கிக் கொண்டு தான் புகழ் புராணம் பாடியதாகவும், இப்போது அதை மறைப்பதற்காக சாமியார் மீது வழக்குப் போடப் போவதாகவும் சொல்லப்படுகிறதே?''

பதில்:

''பணம் சம்பாரிக்கணும்னா நான் எப்படி வேணும் னாலும் சம்பாரிச்சிருப்பேன். எவ்வளவு வேணும்னாலும் சம்பாரிச்சிருப்பேன். சாமியைப் பார்க்க ஐயாயிரம், பாத பூஜை செய்ய 25 ஆயிரம்னு பல தடவை அவனுக்கு நான்தான் தண்டம் அழுதிருக்கேன். புத்தகத்தை மொழிபெயர்த்ததுக்கு அவன்தான் இன்னும் எனக்கு பாக்கி கொடுக்க வேண்டியிருக்கு. இதுக்கிடையில கும்ப மேளாவுக்கு போறதுக்காக என் மனைவி ஒரு லட்ச ரூபாயை அவன்கிட்ட கொடுத்திருக்கா. அதையெல்லாம் திருப்பித் தரச் சொல்லித்தான் அவன் மேல நான் வழக்குப் போடப் போறேன். மத்தபடி சில மாமா பயலுக கிளப்பிவிடுற கதைக்கெல்லாம் நான் கலங்க மாட்டேன்!''

அடங்கொன்னியா... அடங்கவே மாட்டியான்னு கேட்க தோணுதுங்க... அட அவன விடுங்க..  எழுத்தாளர் எல்லாம் புத்திசாலி, காவி உடுத்தரவனெல்லாம் சாமியார்ன்னு நம்புற ஜனங்க இருக்குற வரைக்கும் இவனுங்க கல்லா கட்டிகிட்டேதான் இருப்பாங்க.

இப்போ நித்தி – ரஞ்சிதா விஷயத்தில் குமுதமும், ஜூவியும் கல்லா கட்ட ஆயத்தமாகி விட்டது. அதை வைத்து இவரும் குமுதம் ரிப்போர்ட்டரில் தொடர் எழுதப்போவதாக கேள்வி. இப்பொதெல்லாம் இவரை விடவும் இவரை தலையில் தூக்கி வைத்து கொண்டாடுபவர்களை நினைத்தால்தான் பாவமாக இருக்கிறது.

Monday, March 1, 2010

பத்தாப்பு ரிசல்டும் பக்கத்து வீட்டு பொண்ணும்..

பதின்ம வயது தொடர்பதிவுக்கு என்னை இந்தியாவில் இருந்து நண்பன் கிஷோர் கூப்டாக, சவுதி அரேபியாவில் இருந்து அக்பர் கூப்டாக, ஜப்பானில் இருந்து ஜாக்கிசான் கூப்டாக, அமெரிக்காவில் இருந்து சாம் ஆண்டர்சன் கூப்டாக... அவர்கள் அனைவருக்கும் நன்றி. நான் இங்க பயங்கர்ர பிஸ்ஸி..... ஆனா தொடர்பதிவு எழுதியே ஆகணும்னு நச்சு நச்சுங்குறாங்க.... சரி காசா பணமா ஒரு தடவை எழுதி பாத்துரலாம்னு முடிவு பண்ணிட்டேன். நான் ஒரு தடவை முடிவு பண்ணிட்டா என் பேச்சை நானே கேட்கமாட்டேன் (ங்கொய்யால.... வேற எவன்டா கேப்பான்)



பதின்ம வயதை திருப்பி பாத்தா ஏராளமான விஷயங்களை கடந்து வந்திருக்கிறேன். அதையெல்லாம் எழுத ஆரம்பித்தால் பல வருடங்கள் ஆகும் என்பதால் பத்தாம் வகுப்பில் நடந்த நிகழ்வை மட்டும் குறிப்பிடுகிறேன்



பத்தாம் வகுப்பு ஆரம்பிக்கும் போதே. எல்லா விசேஷ வீடுகளுக்கும் கூட்டி போவதை நிறுத்தி “கண்ணா இந்த வருசம் பத்தாப்பு ..ஸ்பெசல் க்ளாஸ் இருக்கு அதான் வரலை”ன்னு சொல்லும்போது ஆரம்பிக்கற பரபரப்பு ரிசல்ட் வந்து புஸ்ன்னு போற வரைக்கும் விடாது. அதுவும் வகுப்புல சில மாணவ மாணிக்க கொழுந்துகள் இதை படிக்கலையா. அதை படிக்கலையான்னு கரெக்டா நம்ம படிக்காததையா கேட்டு..நம்மல ’ஙே’ன்னு முழிக்க வைச்சு, அவ்ளோதான் மவனே நீ காலி உன் ப்யூச்சரே முடிஞ்சுதுன்னு கலவரபடுத்தி பாக்குறதுல அதுங்களுக்கு அவ்ளோ ஆனந்தம். குறிப்பா பப்ளிக் எக்ஸாம் அன்னைக்கு கொஸ்டின் பேப்பர் அவுட்ன்னு கிளம்பும் பாருங்க ஒரு புரளி அது நம்ம நல்லா படிச்ச கேள்வி பதிலையையும் மறக்கடிச்சிட்டுதான் அடங்கும். பப்ளிக் எக்ஸாம் எல்லாம் முடிஞ்ச அன்னைக்கு ஈவினிங். ஷோ ரத்னா தியேட்டர்ல படம் பாக்க போன உடனேதான் பீதியே கொஞ்சம் அடங்கியது.



அதுவும் ஒன்னரை மாசம்தான். நாளை பத்தாம்வகுப்பு தேர்வு முடிவு வெளியீடுன்னு செய்தியை பார்த்த்தும் பகீர்ன்னு ஒண்ணு அடி வயித்துல இருந்து கிளம்பி நெஞ்சுகுழிக்கும் தொண்டைகுழிக்கும் நடுவுல நின்னு குபீர்ன்னு பீதியை கிளப்பிட்டு இருக்கும். சரி மறுநாள் மாலை முரசை காலையில் 11 மணிக்கெல்லாம் பிரிண்ட் போட்ருவாங்க நேரே தினத்தந்தி ஆபிஸ் போனா வாங்கிறலாம்னு முடிவு பண்ணி 10 மணிக்கே போய் காத்திருந்தோம் நானும் என் நண்பர்களும். பேப்பர் வந்த உடனே நம்பரை சரிபாக்கும் போது நம்ம நம்பர் கண்ணில் படும் வரைக்கும் இருக்கற டென்ஷன் இருக்கே.. அட.. அதையெல்லாம் வார்த்தையில் விவரிக்க முடியாதுங்க... அதனால அத விட்டுட்டு அடுத்த சீனுக்கு போவோம்..



பத்தாப்பு ஆரம்பிச்சதில் இருந்தே எங்க தெருவுல பயங்கர பரபரப்பு..ஏன்னா அதுக்கு முந்தின இரண்டு வருசமா தெரு பசங்களை விட பொண்ணுங்களே அதிக மார்க் வாங்கியதால் பொண்ணுங்களெல்லாரும் இதைசொல்லியே பசங்களை ஓட்ட ஆரம்பித்தால் அதிக கடுப்புடன் இருந்தார்கள். அதுவும் இந்த வருடம் நானும் என் பக்கத்து வீட்டு பெண்ணும் பத்தாம் வகுப்பு என்பதாலும், அந்த பெண் படிப்பில் சுமார் என்பதாலும் பசங்க சைடில் என்மேல் எதிர்பார்ப்பு அதிகம் இருந்த்து.(இன்னுமா இந்த ஊரு என்ன நம்புது..அவ்வ்வ்.) அதுக்கு ஏத்தது மாதிரி காலாண்டு, அரையாண்டிலெல்லாம் புள்ளிகாரியும் என்னை விட குறைவான மார்க்கே எடுத்த்தால் (யார்ரா ...அது நீ எவ்ளோ மார்க் எடுத்தேன்னு சின்ன புள்ளத்தனமா கேக்குறது) எதிர்பார்ப்பு பல மடங்கு எகிறியிருந்தது. அதனால ரிசல்ட் வந்த உடனே என்னை விட அவங்கெல்லாம் பயங்கர டென்ஷன் ஆயிட்டாங்க. நானும் எல்லாருக்கும் சாக்லெட் வாங்கி கொடுக்க ஆரம்பித்தேன். தெருவில் ஓரு வீடு விடாம வேட்பாளர் ஓட்டு கேக்குற மாதிரி சாக்லெட் குடுத்துகிட்டு இருந்தேன். அப்போ பசங்கெல்லாம் வேகமா ஓடிவந்து அவ இன்னும் யாரு வீட்டுக்கும் சாக்லெட் குடுக்கல... பெயில் ஆயிருக்கலாம்னு அவனவன் ஜோதிடம் சொல்ல ஆரம்பித்தனர். ஒரு சிலர் வெடி வாங்க ஆள் அனுப்பும் அளவிற்கு இடமே பரபரப்பானது. அன்று முழுவதுமே அவள் யார் வீட்டிற்கும் வந்து சாக்லெட் கொடுக்காத்தால் எனக்கே அவள் மேல் பரிதாபம் பிறந்தது. மறுபடி அவள் நம்பரை எடுத்து செக் பண்ணி பார்த்தால் அவள் பாஸ் ஆயிருக்கிறாள்.

சரி பரிச்சை சரியாக எழுதாத்தால் இருக்கலாம் என எண்ணி கொண்டேன். மறுநாள் மார்க்‌ஷீட் வாங்க பள்ளிக்கு சென்று வரிசையில் நிக்கும்போது முதல் பத்து பேர்களின் மார்க் பார்த்தால் பார்டரில் தாண்டியிருக்கிறார்கள். “இந்த மார்க்கு பெயிலே ஆயிருக்கலாம்டா” ன்னு ஒருத்தன் அடிச்ச கமெண்டில் என் முந்தைய நாளின் சந்தோஷம் காணாமல் போயிருந்தது. எதிர்பார்த்தது மாதிரியே என்னோட மார்க்கும் சொல்லிக்கற மாதிரி இல்ல. எனக்கு என் மார்க்கை விட என் தெருபையன்களை நினைத்துதான் ரொம்ப பாவமாக இருந்தது. சரி ஆனது ஆச்சு இத எப்பிடி சமாளிக்கறதுன்னு யோசிச்சுகிட்டே வீட்டுக்கு போயாச்சு. வீட்டுகுள்ள போன உடனே நல்லா தூக்கம் வந்திச்சு. சரி கொஞ்சம் படுக்கலாம்னு படுத்து தூங்கி விட்டேன். (எப்பிடிறா இந்த நிலமைலயும் உனக்கு தூக்கம் வருதுன்னு கேக்காதீங்க... அதை கேட்டு ஏற்கனவே நண்பர்கள் எல்லாரும் காறிதுப்பிட்டாங்க) எழுந்து பாத்தால் பக்கத்து வீட்டு மாமாவிடம் அம்மா பேசிட்டு இருந்த்து காதில் விழுந்தது. “பாவம் மார்க் குறைஞ்சிட்டேன்னு வருத்த்துல இருக்கான். நல்லா முயற்சி பண்ணிணான். என்ன பண்ண?” ன்னு சொலுறது காதில விழுந்த உடனே ஊரை சமாளிக்க இதாண்டா ஒரே வழின்னு நினைச்சு நானும் போயி எல்லாருக்குமே மார்க் குறைஞ்சுதான் வந்துருக்கு. வேல்யூயேசன் டஃப்பா இருந்திருக்குன்னு..இல்லேன்னா.....அப்பிடின்னு அளக்க ஆரம்பிச்சேன். அப்போ பாத்து பக்கத்து வீட்டு பொண்ணு எங்க வீட்டுக்குள்ள லட்டோட வந்தா....அவள் 450க்கு மேல் மார்க் லட்டு கொடுத்து கொண்டாட வந்திருக்கா.. (என்னா வில்லத்தனம்..) அப்போ அந்த அங்கிள் என்ன பார்த்த பார்வை இருக்கே...இன்னமும் என்னால மறக்க முடியாது. அவள் மற்ற அனைவருக்கும் சாக்லெட்தான் கொடுத்து விட்டு எனக்கு மட்டும் லட்டு கொடுத்த விசயம் பின்னொரு ரகசிய விசாரணையில் தெரிய வந்தது.



பிகு 1

அவள் ஏன் முந்தைய நாள் சாக்லெட் கொடுக்காம மறுநாள் லட்டு கொடுத்தா..இந்த கேள்விக்கான விடை மட்டும் இன்னும் எனக்கு கிடைக்கவில்லை. உங்க யாருக்காவது தெரியுமா..?



பிகு 2

“ பத்தாப்பு ரிசல்டும் பக்கத்து வீட்டு பிகரும்’” “ அப்பிடின்னு ரைமிங்காதான் முதலில் தலைப்பு வைச்சேன். ஆனா கலாச்சார காவலர்கள் சொம்பை தூக்கிட்டு வந்துருவாங்களே... அப்பிடின்னு பயந்து போயி தலைப்பை மாற்ற வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளானேன் என்பதை கம்பெனி மிகுந்த வருத்தத்தோடு தெரிவித்து கொள்கிறது.



இந்த தொடர் பதிவுக்கு நான் அழைக்க இருப்பது



கலையரசன் – வடலூரான் என்ற பெயரில் பதிவிட்டு வருகிறார். கலாய்த்தல் & நக்கல் நடைக்கு பெயர் போனவர். என் சிறந்த நண்பர். இதே போன்று ஓரு தொடர்பதிவில் இருந்து தொடரும் நட்பு. ஆனாலும் பலவருடம் பழகியது போன்ற உரிமை. தற்போது பதிவிற்கு சிறிய இடைவெளி கொடுத்திருக்கிறார் ( சீக்கிரம் வாடா..கலை... மற்ற விஷயங்கள் கடந்து போகும்.. இந்த அழைப்பிற்காக நீ இப்போதே எழுத வேண்டும் என்ற கட்டாயமில்லை...உனக்கு எப்போது எழுத வேண்டும் என தோன்றுகிறதோ..அப்போது எழுது...)

கார்த்திகேயன் – கீதப்பிரியன் எனும் பெயரில் பதிவெழுதி வருகிறார். ஹாலிவுட் பட விமர்சனம்தான் இவரின் பேவரிட். நான் அவ்வளவாக ஆங்கில படங்களை பார்ப்பதில்லை. ஆனாலும் இவர் மற்றும் ஹாலிவுட் பாலாவின் விமர்சனங்களை பார்த்துதான் சில படங்களை பார்க்க ஆரம்பித்து இருக்கிறேன். சில படங்களை பார்த்து விட்டு இவரின் விமர்சனங்களை மீண்டும் படிக்க தூண்டும் அளவிற்கு விரிவாக எழுதியிருப்பார் நீங்களும் போய்ப் பாருங்கள்.



திவ்யாஹரி – காதல் ரசம் சொட்டும் கவிதைகளுக்கு சொந்தக்காரர். இவர் கணவர் ஹரியில் மேல் உள்ள அளவில்லா காதலில் எழுதிய வரிகளை பார்க்கும் போது ஹரி கொடுத்து வைத்தவர் எனும் எண்ணம்தான் அனைவருக்கும் ஏற்படும். பதிவுலக விமர்சனத்தை நம்பி ஆயிரத்தில் ஓருவன் படம் பார்த்து விட்டு இவர் எழுதிய விமர்சனம் எனக்கும் மிகவும் பிடித்தது. (இவ்ளோ அப்பாவியா ...இவங்க என்று)