Saturday, April 9, 2011

நெல்லையில் முந்துவது யார் - தேர்தல் நிலவரம்

நீண்ட நாள்களுக்கு பிறகு என் பளாக்கில் பதிவில் எழுதும் போது ஒரு இனம் புரியாத கேள்வி “ஏன் இதை இவ்வளவு நாள் எழுதவில்லை?” என. பெரிய காரணங்கள் ஒன்றுமில்லை எழுத விஷயங்களும் ஆர்வமும் இல்லாததுதான்.

சரி விஷயத்திற்கு வருவோம்.  தேர்தல் வருவதால் பதிவு, பஸ், டிவிட்டர் என ஆங்காங்கே விவாதங்கள் நடைபெறுவதால் நானும் நெல்லை தொகுதியை பற்றி பதிவிடலாம் என நினைத்து இதோ ஆரம்பித்தாகிவிட்டது.




எல்லா தேர்தல்களிலும் அரசியல் கட்சிகள் மிகவும் கவனத்தோடு வேட்பாளர்களை தேர்வு செய்யும் தொகுதி நெல்லை ஏனெனில் இந்த தொகுதியில் வென்ற கட்சிதான் ஆட்சியமைக்கும் எனபது இதுவரை நடந்த தேர்தல்களில் நிருபணமாகி இருக்கிறது.  இப்போது திமுக சார்பாக ஏஎல் எஸ் லெட்சுமணனும் அதிமுக சார்பில் நயினார் நாகேந்திரனும் பலப்பரிட்ஷை நடத்துகிறார்கள். கடந்த 2001ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் நயினார் நாகேந்திரன் 722 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வென்று 2006ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் மாலைராஜாவிடம் 606 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் தோற்று தற்போது மூன்றாவது முறையாக நெல்லை தொகுதியில் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து நான்கு முறை தொகுதியில் போட்டியிட்டு இரண்டு முறை எம் எல் ஏ ஆனவரும் திருநெல்வேலி மாநகராட்சி மேயராகவும் இருக்கும் ஏ எல் எஸ்ன் மகன் லெட்சுமணன் போட்டியிடுகிறார். சிட்டிங்க் எம் எல் ஏ மாலைராஜாவின் ஆதரவும் கட்சி மற்றும் தந்தையின் செல்வாக்கும் கரைசேர்க்கும் என நம்பியிருக்கிறார்.  

தொகுதியை பொறுத்தவரை திமுக, அதிமுகவிற்கு சம அளவில் செல்வாக்கு உள்ளது. வேட்பாளர் அறிவித்த நாளில் இருந்து கணிக்க முடியாத அளவிலேயே இருக்கிறது. காங்கிரஸ் கூட்டணியில் இருப்பதால் பந்தயத்தில் திமுக சற்று முன்னே நின்றாலும் நயினார் நாகேந்திரனின் மற்றும் கட்சியினரின் அபாரமான பீல்ட் வொர்க்கினால் உடனடியாக சுதாரிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.

இதுவரை 1951 ல் இருந்து 2001 வரை தொகுதி வெற்றி நிலவரம் கீழே. ( நன்றி: Press Information Bearu chennai) 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட மாலைராஜா 65,517 ஓட்டுகளும் அதிமுக சார்பில் போட்டியிட்ட நயினார் நாகேந்திரன் 64,911 ஓட்டுகளும் வாங்கினார். 606 ஓட்டுகள் வித்தியாசத்தில் திமுக வெற்றி பெற்றது.


இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் மேட்சை போல பரபரப்பான போட்டியில் திமுகவும் அதிமுகவும் திமுக 2001 தேர்தலில் 722 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் தொகுதியை இழந்து 2006 தேர்தலில் 606 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் மீண்டும் தொகுதியை கைப்பற்றியிருக்கிறது. தற்போதய பரபரப்பான் சூழலில் காங்கிரஸ் கூட்டணியில் இருப்பது மற்றும் மதிமுக எதிர் கூட்டணியில் இல்லாதது போன்ற சாதகமான சூழ்நிலைகள் திமுகவிற்கு இருந்தாலும் கடுமையான களப்பணி, கடந்த முறை கடும் போட்டியை கொடுத்த அதிமுக வேட்பாளர், பாளை தொகுதிக்கு பரிச்சயமான திமுக வேட்பாளர் என சில காரணங்களால் தற்போதைய நிலவரப்படி 60:40 என்ற அளவில் அதிமுகவின் ஆதிக்கம் அதிகமா படுகிறது. தேர்தலுக்கும் இன்னும் ஓரு வாரம் கூட இல்லாத நிலையில் இறுதி நேர களப்பணி, வாக்குகள் பதிவாகும் சதவிகிதம் ஆகியவற்றால் இன்னமும் கணிக்க முடியாத தொகுதியாக இது இருக்கிறது. 

 டெய்ல் பீஸ்:  பாளை தொகுதியை பொறுத்தவரை சிட்டிங் எம் எல் ஏ மைதீன்கான் பக்கமாகவே காற்று பலமாக வீசுகிறது