Monday, February 22, 2010

வீடு கட்டும் செலவை குறைக்க உதவும் “லாரி பேக்கர் தொழில்நுட்பம்”

சில விஷயங்கள் சாதரணமாக ஆரம்பித்து சுவாரஸ்யமாக மாறி நம் நேரங்களை அபகரித்து கொள்ளும் என்பதை எனக்கு இந்த லாரிபேக்கர் குறித்த தேடல் எனக்கு உணர்த்தியது. இதற்கு முன் அவரை குறித்து அறிந்திருந்தாலும் அவையெல்லாம் கடுகளவு என தோணச்செய்தது அவரின் சாதனைகள். கட்டிட கலைக்காக தன்னையே அர்பணித்தவரின் செயல்முறைகளில் கட்டுமான செலவினங்களை குறைக்க உதவும் முறைகளில் சிலவற்றை இங்கு காண்போம்.

இது குறித்து அவர் எழுதிய ‘A Manual of Cost cut for Strong Acceptable Housing’ என்ற புத்தகத்தில் விரிவாக எழுதியுள்ளார். இதனை இந்த சுட்டியில் தரவிறக்கி படித்து பாருங்கள்.


SHAPE ( அமைப்பு )


கட்டிடத்தின் அமைப்பும் கட்டுமான செலவுகளில் முக்கிய பங்கு வகிக்கிறது. உதாரணமாக 20 மீ2 அளவுள்ள ஓரு கட்டிட்த்தை 4 மீ அகலமும் 5 மீ நீளமுமாக சதுர வடிவில் அமைத்தால் கட்டுமான செலவு மிகவும் கூடும். ஏனென்றால் சுவரின் சுற்றளவு (Perimeter) 18 மீ வரும் இதையே செவ்வக வடிவிலோ , அரை வட்ட அல்லது வட்ட வடிவில் அமைத்தால் சுவரின் சுற்றளவு குறையும். தேவையான ஏரியாவும் நமக்கு கிடைக்கிறது அதே சமயம் சுவரின் சுற்றளவு குறைவதால் செங்கல் கட்டும் கணிசமான அளவில் குறைகிறது. கீழ்காணும் அட்டவணையில் 20 மீ2 பயன்பாட்டு ஏரியாவிற்கு பல அமைப்பு(Shape)களில் வெளிச்சுவர்களின் சுற்றளவு மீட்டரில் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் சதுரமான அமைப்பை விட செவ்வகமான மற்றும் வட்ட வடிவ அமைப்பே செலவை குறைக்கும் வழிமுறைகளில் சிறந்தது என அறியலாம். (இந்த அமைப்பில் செவ்வகத்தை விட சதுர அமைப்பே சுவரின் சுற்றளவு குறைவாக வருகிறது. பின்னூட்டத்தில் குறிப்பிட்ட திரு சிவ் அவர்களுக்கு நன்றி)


வட்ட வடிவும் செவ்வக அமைப்பும் ஓரே சுற்றளவுதான் என்றாலும் நம்முடைய தேவைகளை கருத்தில் கொண்டு அமைப்புகளை முடிவு செய்வது நலம். ஓரே கட்டிட ஏரியா அதன் அமைப்பின் மூலம் மனையில் அதிக அளவு காலியிடத்தை ஏற்படுத்துகிறது என்பதை கீழ் உள்ள படத்தின் மூலம் தெளிவாக தெரிந்து கொள்ளலாம். நமக்கு தேவையான இடமும் கிடைக்கும் அதே நேரத்தில் அதிக அளவு காலியிடங்களின் மூலம் வீட்டிற்கு கிடைக்கும் காற்றோட்டமும் அதிகரிக்கும். ஆரோகயமாக வாழ்வதற்கு வீட்டினுள் கிடைக்கும் காற்றோட்டம் முக்கிய பங்களிப்பு ஆற்றும்.




செங்கல் சுவர்

செங்கல் சுவர்களை பூசாமல் விடுவதன் மூலம் கணிசமான அளவு செலவை குறைக்கலாம். செங்கல் சுவர்களுக்கு அது போண்ற பூச்சுமானமும் தேவையில்லை. இப்படிப் பூசிய வீடுகளில் வெயிலில் உள்ளே வெப்பமும் மழையில் உள்ளே குளிருமாக உள்ளது. சுவரைப் பூசாமல் விட்டால் மழைக் காலத்தில் வீட்டின் உள்ளே வெப்பமாகவும் வெயில் காலத்தில் உள்ளே குளிர்ச்சியாகவும் இருக்கும். செலவும் குறைவு.

செங்கல் கட்டும்போது வழக்கமான ”இங்கிலீஸ் பாண்ட் (Engilish Bond)” க்கு பதிலாக ”ரேட்டிராப் பாண்ட் (Rat trap Bond)” உபயோகித்தால் செலவும் குறையும், அதே நேரத்தில் சுவரில் கேவிட்டி அமைப்பும் இருப்பதால் எந்தவிதமான தட்பவெப்ப நிலைக்கும் வீட்டினுள் இதமான அமைப்பை ஏற்படுத்துகிறது. இந்த இரு அமைப்பையும் கீழ் உள்ள பட்த்தின் மூலம் தெளிவாக அறியலாம்

”இங்கிலீஸ் பாண்ட் (Engilish Bond)”





”ரேட்டிராப் பாண்ட் (Rat trap Bond)”







சுவரில் டைல்ஸ் ஒட்டவே கூடாது. அது சுவர்களின் சுவாசத்தைக் கெடுக்கும். வீட்டுக்குள் காற்று வராது. அதனால்தான் வீட்டைப் பூட்டி விட்டு வெளியே சென்றவர்கள், திரும்பி வந்ததும் மின்விசிறியைப் போட்டுக்கொள்கிறார்கள். வீடு, இறுக்கமாக இருப்பதால் அதில் வசிப்போருக்கு நிறைய நோய்களும் வருகின்றன (கலை விமர்சகர் தேனுகா திரு. அண்ணாகண்ணன் அவர்களுக்கு அளித்த பேட்டியில் சொன்ன வரிகள். http://annakannan-interviews.blogspot.com/2005/07/blog-post_112280867419794933.html)


லாரி பேக்கர் கட்டிய உயர்தர விடுதிகள், கல்வி நிறுவனங்கள், மருத்துவநிலையங்கள் போன்றவை இயற்கை சூழலுடன் இணைந்து ஆடம்பரம் இல்லாத அழகுடன் திகழ்பவை. மருத்துவர்கள் லாரிபேக்கர் பாணி கட்டிடங்கள் நோயாளிகளுக்கு ஆறுதலானவையாக இருப்பதாக கூறினார்கள்.

குளிரூட்டும் வசதிக்காக லாரி பேக்கர் உருவாக்கிய உத்தியும் அபாரமானது. வீட்டுக்குள் சிறிய குளம் ஒன்றை உருவாக்கி அதனை சுற்றி சுட்ட செங்கலால் ஆன சுவரை அமைத்து விடுவார். அது நீரை உறிஞ்சி குளிர்ந்து வெளிவிட்டு குளிரூட்டும் பணியை செய்யும்.


ரூஃப் கான்கிரீட்டிற்கு (Roof Concrete) இவரின் முறை மிகுந்த ஆச்சர்யத்தை ஏற்படுத்தும். சிவில் இன்ஜியரிங்கின் மிகநுட்பமான விஷயங்களை பயன்படுத்தி செலவுகளை குறைக்கும் வழிமுறைகளை கூறியிருப்பார். அது குறித்தும் மேலும் பல விஷயங்களை குறித்தும் அடுத்த பதிவில் பார்க்கலாம்.


------

உங்கள் ஊக்கங்களை எதிர்பார்த்து



கண்ணா..

Wednesday, February 10, 2010

தேவதை எனப்படுபவள் யாரெனில் தபுசங்கர் கவிதைகளில் வாழ்ந்து கொண்டிருப்பவளேதான்...

காதலர் தினத்துக்காக பதிவுலகமே கவிதைகளா எழுதி பரபரப்பா இருக்கறத பாத்த உடனே நானும் முடிவு பண்ணிட்டேன்.. நாமளும் கவிதை எழுதிரணும்டான்னு..   பேனாவை தொறந்து வச்சு வானத்தை பாத்த மேனிக்கு கண்ணை மூடிகிட்டு யோசிக்கறேன்..    ங்கொய்யால..  ஓண்ணுமே தோண மாட்டுக்கு... சரி என்னடா இது சத்திய சோதனைன்னு நினைச்சுகிட்டு... பெட்டிகுள்ள இருந்து பைஜாமால்லாம் போட்டு வைரமுத்து ரேஞ்சுக்கு நடந்து பாக்குறேன்... அப்பயும் கவிதை வருவனான்னு அடம் பிடிக்குது... பேசாம இதையெல்லாம் எண்டர் தட்டி கவிதைன்னு லேபிள் வைச்சுரலாமான்னு  (?!!!!)   யோசிச்சுகிட்டே பாத்தா தபுசங்கர் ஞாபகத்துக்கு வந்தார். அவர்தான் தேவதைகளின் கவிஞர் ஆச்சே..அவரோட கவிதையே எடுத்து போடலாம்னு முடிவு பண்ணி.. எனக்கு பிடித்த அவரின் சில கவிதைகளை பதிவிடுகிறேன்.  என்ஜாய் மக்கா..

-----------------------------------------------------------------

தபுசஙகரின் கவிதைகளில் எனை கவர்ந்தவைகள்


ஓரே ஓரு முறைதான்

எனினும்

உன் உன்னத நிழல்

என்மீது பட்ட போதுதான்

நான் ஓளியூட்டப்பட்டுக்

கவிஞனானேன்!



அற்புதமான காதலை

மட்டுமல்ல

அதை உன்னிடம்

சொல்ல முடியாத

அதி அற்புதமான

மெளனத்தையும்

நீதான் எனக்குத்

தந்தாய்


அழகான பொருட்களெல்லாம்

உன்னை நினைவு படுத்துகின்றன.

உன்னை நினைவுபடுத்துகிறவை எல்லாமே

அழகாகத்தான் இருக்கின்றன."




"உன்னிடம் பேச எவ்வளவு

ஆசைப்படுகிறேனோ அவ்வளவு

ஆசை உன்னிடம் பேசுபவர்களிடமும்

பேச வேண்டும் என்பதில்."




"நான் எது கேட்டாலும் வெட்கத்தையே

தருகிறாயே...வெட்கத்தைக் கேட்டால்

என்ன தருவாய்?."



காதல்தான்

நான் செய்யும் தவம்

என் கடுந்தவத்தைக் கலைத்து

என்ன வரம் வேண்டும் என்று

எந்த தெய்வமும்

என்னை கேட்காமலிருக்கட்டும்..

என் தவத்தைவிட

சிறந்ததாய்

எந்த வரத்தையும்

எந்த தெய்வத்தாலும்

தந்துவிட முடியாது!



'ஒரு நிமிடத்தில்


உன்னைக் கடந்துபோகிற பெண்ணைப் பார்க்க

தினமும் ஒரு மணி நேரம் காத்திருக்கிறாயே' என்று

கேட்ட என் நண்பனிடம் சொன்னேன்...


'நீ கூடத்தான்

ஒரே ஒரு நாள் சம்பளம் வாங்குவதற்காக

ஒரு மாதம் முழுவதும் வேலை செய்கிறாய்!'


நீ எப்போதும்

தலையை குனிந்தே

வெட்கப்படுவதால்

உன் மதிப்புமிக்க

வெட்கத்தையெல்லாம்

இந்தப் பூமி மட்டுமே தரிசிக்க

முடிகிறது!


ஓரேயொரு முறை

கொஞ்சம் உன் தலையை நிமிர்த்தி

வெட்கப்படேன்..


வெகுநாட்களாய்

உன் வெட்கத்தைத் தரிசிக்க

துடிக்கிறது

வானம்!


என்னை

உடைப்பதற்காகவே

என் எதிரில்

சோம்பல் முறிப்பவள் நீ


நீ யாருக்கோ செய்த

மெளன அஞ்சலியைப்

பார்தத்தும்..
.
எனக்கும்

செத்துவிடத் தோன்றியது



அன்று

நீ குடை

விரித்தற்காக்க்

கோபித்துக் கொண்டு

நின்றுவிட்ட

மழையைப்

பார்த்தவனாகையால்


இன்று


சட்டென்று மழை

நின்றால்

நீ எங்கோ குடை

விரிப்பதாகவே

நினைத்துக்

கொள்கிறேன்


உன் அழகு

வெட்டி வைத்திருந்த

ஆழ்துளைக் கிணற்றில்

விழுந்த சிறுவன் நான்



‘என்னை எங்கு பார்த்தாலும்

ஏன் உடனே நின்று விடுகிறாய்:’

என்றா கேட்கிறாய்

நீ கூட்த்தான்

கண்ணாடியை எங்கு பார்த்தாலும்

ஓரு நொடி நின்று விடுகிறாய்

உன்னைப் பார்க்க உனக்கே

அவ்வளவு ஆசை இருந்தால்

எனக்கு எவ்வளவு இருக்கும்




கரையில் நின்றிருந்த

உன்னைப் பார்த்ததும்

கத்திவிட்டன

கடல் அலைகள்...

'கோடான கோடி ஆண்டுகள்

எம்பி எம்பிக் குதித்து

கடைசியில் பறித்தே

விட்டோமா

நிலவை!' என்று.



உன்னிடம்

என் இதயத்தைத் தொலைத்துவிட்டதாக

எப்போதும் புலம்பியதில்லை நான்.

எனக்குள் இருந்த இதயத்தைக்

கண்டுபிடித்துக் கொடுத்தவளே நீதான்


பல நூற்றாண்டுகள் ஆகுமாமே

ஒரு வைரம் உருவாக.

நீ மட்டும் எப்படி

பத்தே மாதத்தில் உருவானாய்?


உன்னைக் கடித்த எறும்புகளெல்லாம்

'தேவதையைக் கடித்த எறும்புகள் சங்கம்' என்று

ஒரு சங்கம் வைத்திருக்கிறதாமே



நீ ஆற்றில் குளிப்பதை

நிறுத்திவிட்டு

வீட்டுக்குள் குளியலறை கட்டிக்

குளிக்க ஆரம்பித்தாய்.

வறண்டு போனது

ஆறு.



சின்ன வயதிலிருந்து என்னை

தொட்டுப் பேசும் பழக்கத்தை

நீ நிறுத்திக்கொண்ட போதுதான்

தெரிந்துகொண்டேன்...

நீ என்னைக் கட்டிக்கொள்ள

ஆசைப்படுவதை!

Monday, February 8, 2010

கட்டிட கலை & லாரி பேக்கர் - சிறு அறிமுகம் - தொடர் 01

   மனிதனின் அடிப்படை தேவைகளான உணவு, உடை, இருப்பிடங்களில் மூன்றாவதானதும் கலைகளின் புராதானதுமான கட்டிட கலையை பற்றி தொடராக எழுதலாம் என நிறைய நாட்கள் நினைத்து வந்தாலும் அதற்கான ஆரம்பமே இன்றுதான் கைகூடுகிறது. இந்த தொடரை கட்டிட கலையின் காந்தி என்றழைக்கப்படுபவரும், வீடு கட்ட ஆகும் செலவை குறைக்கும் ஆராய்ச்சியில் தன் வாழ்நாளை செலவழித்து வழிமுறைகளை வகுத்த “லாரி பேக்கர்” க்கு சமர்ப்பித்து ஆரம்பிக்கிறேன்.



பழங்காலத்தில் இயற்கை சீற்றங்களில் இருந்தும், வனவிலங்குகளிடமிருந்தும் தன்னை பாதுகாக்க குகைகளில் தஞ்சம் அடையும் போது ஆரம்பமாகிறது கட்டிடகலையில் அத்தியாயம். அதன்பின் பல பரிணாமங்களை கண்ட இக்கலை நவீன யுகத்திற்கேற்ப பிரமாண்ட வளர்ச்சியைடந்து இருக்கிறது என்று சொன்னால் அது மிகையில்லை.



நவீன யுகத்தில் தேவைகளுகான கலையாக வளர்ந்ததை விட அழகியல் சார்ந்து மிக வேக வளர்ச்சியடைந்தது. ஆனால் இந்தியா போன்று குடியிருக்க வீடின்றி தவிக்கும் ஏழை மக்கள் அதிகம் உள்ள நாடுகளிலும் இது அழகியல் சார்ந்து வளர்வதை காட்டிலும் அடிப்படை தேவைகளுக்கா வள்ர்வதுதான் உண்மையான வளர்ச்சி என லாரி பேக்கர் போன்ற மேதைகள் தொடர்ந்து வலியுறுத்து வருகிறார்கள்.


பேக்கரின் வீடுகள் பற்றிய தன் சிந்தனை வியப்பானது.

“உலகமெங்குமே ஒரு நடுத்தர வர்கத்து மனிதனின் வாழ்க்கை சேமிப்பில் பெரும்பகுதியை வீடுகள் பிடுங்கிக் கொள்கின்றன. நாற்பது ஐம்பது வருடம் ஒருமனிதன் ஒரு வீட்டுக்காக உழைக்கிறான் என்பதே அதற்குப் பொருள். அதைவிட அபத்தமான ஏதும் இல்லை. ஏன் என்றால் அந்த வீட்டின் ஆயுட்காலம் அந்த அளவுக்கு நீளமானதல்ல. கடனைக் கட்டிமுடிக்க வீடு பழையதாகிவிடுகிறது. இடிக்க வேண்டியதுதான். புதிய நாகரீகத்தில் வீடு போல ஒரு மாபெரும் வீண் வேறு எதுவுமே இல்லை.”



இதற்குக் காரணம் வீடுகட்டுவதில் உள்ள வணிகம். நம் வீடுகளின் பெரும்பகுதி தொழில்துறையால் உருவாக்கப்பட்ட பொருட்கள். தொழில்துறை அவற்றை நமக்கு தேவையானதாக ஆக்குகிறது. எளிய கடன் வசதிகள் மூலம் நம்மை அவற்றை வாங்கச்செய்கிறது. நமது வீட்டில் பயன்படுத்தப்பட்டுள்ள பொருட்கள் உண்மையில் நமக்குத் தேவைதானா என்பதையே நாம் அறிவதில்லை. தொழில்துறை உற்பத்தியாக வீடு இருக்கும்போது அதற்கு ஒரு பொதுத்தன்மை தேவையாகிறது. காஷ்மீர் முதல் கன்யாகுமரி வரை ஒரே பொருட்கள். ஒரே வடிவமைப்பு.

இந்தக் காரணத்தால் வீட்டின் கட்டுமானப் பொருட்களின் விலையில் அறுபதுசதவீதம் வரை அந்தபொருட்களை கொண்டுவந்து சேர்க்கும் செலவாக இருக்கிறது



இதனால் லாரி பேக்கர் ”ஒருபிராந்தியத்தில் கிடைக்கும் பொருட்களையும் திறமையையும் மட்டுமே பயன்படுத்தி அங்கே வீடுகளைக் கட்டுவது “ என்பதை அடிக்கடி வலியுறுத்தி வந்தார்.



லாரி பேக்கர் ஓரு சிறுகுறிப்பு



01.03.1917 - 01.04.2007



இங்கிலாந்தில் பிறந்து, இரண்டாம் உலகப் போரின் போது மிஷினரியின் மூலம் சேவை செய்ய 1945 ல் இந்தியா வந்து தற்செயலாக காந்தியடிகளைச் சந்தித்து அவருடைய விருப்பப்படி இந்தியாவில் தங்கி, கட்டடக் கலையில் காந்தியத்தன்மையைப் புகுத்தியவர் 2007ம் வருடம் ஏப்ரல் 1 ம் தேதி திருவனந்த புரத்தில் காலமானார்.



அவருடைய கட்டடங்கள் மிக எளிமையான அருகில் கிடைக்கக் கூடிய eco frindly பொருட்களைக் கொண்டு கட்டியவர். அவர் கட்டிய 3000 தனியார் ம்ற்றும் கேரள அரசு கட்டிடங்கள் கேரளா முழுவதும் காண முடியும்.



ஏராளமான விருதுகளை வாங்கிய அவருக்கு இந்திய அரசு 1991 ல் பத்மஸ்ரீ விருதை வழ்ங்கி கௌரவித்தது.



கேரள டாக்டர் எலிசபெத்தை மணந்து, இந்தியக் குடியுரிமை பெற்று கடந்த 50 வருடங்களாக திருவனந்தபுரத்தில் வாழ்ந்தவர்.



அவர் கேரள அரசுடன் இணைந்து COSTFORD எனும் தொண்டு நிறுவனத்துடன் செயல் பட்டு வந்தார்.



இனிமேல் வீடு கட்டுவ்தாக இருப்பவர்கள், Life, Work & Writings - Laurie Baker என்ற புத்தகம் G.Bhatia Penguin Publishers வாங்கிப் படித்து பயனடையலாம்


----------

லாரி பேக்கரின் கட்டிடத்தின் செலவுகளை குறைக்க உதவும் தொழில் நுட்பம் அடுத்த பாகத்தில்.....


----------