Monday, November 1, 2010

ஆர்க்கிடெக்ட் அதிசயங்கள் - தஞ்சை பெரிய கோவில்

தஞ்சை பெரிய கோவில்

இலங்கையில் பெரிய புத்தர் சிலையை பார்த்துவிட்டு தஞ்சைக்கு வந்த இராஜராஜ சோழன் அதே மாதிரி சிவனுக்கு கோயில் கட்ட ஆசைப்பட்டார். விளைவு தஞ்சை பெரிய கோவில். இக்கட்டிடத்திற்கு 14 நிலைகள் உண்டு. 216 அடி உயரமுடையது. ஒவ்வொரு கோபுர மூலையிலும் நந்திகள் அமைக்கப்பெற்றுள்ளது என்பதெல்லாம் எல்லோருக்கும் தெரிந்ததுதான்.

ஆனால், எல்லோரும் நினைத்து கொண்டிருப்பது போல் இராஜராஜ சோழனின் தலைமை ஆர்க்கிடெக்ட் பெருந்தச்சர் குஞ்சரமல்லர் என்றால் தவறு. அவருக்கும் கீழே இருந்த நித்த வினோத பெருந்தச்சன் எனப்படும் குணவன் எனப்படும் சிற்பியே தலைமை ஆர்கிடெக்டாக பணிபுரிந்து வந்தார். ( கோயிலின் உச்சியில் இடம் பெற்றிருக்கும் அந்த கல் விமானத்தை எந்தவித கிரேனும் இல்லாம உச்சியில் ஏற்றிய டெக்னிக் நித்த வினோத பெருந்தச்சனுடையது) அவருக்கு உதவியாக இருந்த மற்றுமொரு ஆர்க்கிடெக்ட் இலத்திச்சடையண் என்பவராகும். மேலும் இவர்களுக்கு டிசைனராக பணிபுரிந்தது சீராளன் என்னும் ஓவியர்.

வெறும் செங்கற்கள் நிலைபெறாது என புரிந்து வைத்திருந்த இராஜராஜ சோழன் நித்த வினோத பெருந்தச்சனின் யோசனைப்படி நாரத்தை எனப்படும் இடத்திலிருந்து (தற்போதைய திருவல்லம் அருகே ) கருங்கற்களைக் கொண்டு கற்றளி எழுப்பினார். கோபுரத்தின் மொத்த உயரம், மொத்த நிலைகள் நீள அகலம், மூல லிங்கத்தின் உயரம் என மொத்தமும் பேசி திட்டமிடப்பட்டு விவாதித்து பிறகு கட்டிட வேலைகள் துவக்கப்பட்டன. கோபுரத்தின் உச்சியில் வைப்பதற்காக கொண்டு செல்லப்பட்ட வழியும் நந்தி உள்ளிட்ட துணைச் சிற்பங்களை கொண்டு செல்லப் பட்ட வழியும், முறையும் இப்பொழுதும் கூட ஆச்சர்யமாகத்தான் உள்ளது.


மேல்நிலைகளுக்கும், உச்சிக்கும் பொருட்களைக் கொண்டு செல்ல சாரம் கட்டுவதா? அல்லது உச்சியில் இராட்டினம் அமைத்து கருங்கற்களை கயிற்றால் கட்டி இழுப்பதா? அல்லது  கோபுர உச்சியில் இருந்து தரையின் வரையில் ஒரே நேரான  சரிவான பாதை அமைப்பதா? என குழப்ப நிலை வேறு. அவ்வாறு நீளமான சரிவான பாதை அமைக்கும் போது அந்த பாதையின் நீளம் ஒரு கிராமத்தையும் (ஏறக்குறைய 6 கி. மீ) தாண்டி நிற்கும் என அளந்து பார்த்து அத்திட்டத்தையும் கைவிட்டனர். அவ்வளவு உயரத்திற்கும் நீளத்திற்கும் மண் பாதை போட முடியாது என மாற்று வழி யோசித்தனர். பின்புதான், கோயிலின் கோபுரத்தைச் சுற்றியே கோபுரத்தின் உச்சி வரை வளைவு பாதை போடுவதென தீர்மானித்தார்கள். இந்த ஐடியா நித்த வினோத பெருந்தச்சனுடையதாகும். கோயில் கோபுரம் எழ எழ அதனை சுற்றியே மண் கொட்டப்பட்டு, மண்பாதை அமைக்கப் பட்டது. அவ்வழியே கோபுரத்திற்கு தேவையான துணைச்சிற்பங்கள், கோபுர மூலையில் வைப்பதற்கான நந்திகள் மற்றும் விமானங்கள் போன்றவை யானைகள் மூலம் எடுத்து செல்லப்பட்டன.  அந்த மண்பாதையின் அகலம் 16 அடியாகும்.

கருங்கற்கள் தூண்கள் பெரும்பாலும் ஒரே கல்லில் செய்வதென தீர்மானிக்கப்பட்டது. உத்திர கட்டைகள் மட்டும் சாந்தினால் இணைக்கப்பட்டது. சாந்து கலவை செய்வதற்கு புற்று மணல், சாம்பிராணி மற்றும் ஏகப்பட்ட மூலிகைப் பொருட்களை கொண்டு தயாரிக்கப்பட்டது. சோழர்களின் ஆட்சிக்காலம் முடிந்து வெகு காலம் வரை எத்தனையோ மன்னர்கள் வந்து தஞ்சையை சூறையாடிய பிறகும் இந்த பிரகதீஸ்வரர் ஆலயம் மட்டுமே அவர்களையும் காலத்தையும் வென்று நின்று கொண்டிருக்கிறது.

இந்த கோவில் கட்டுவதற்கான தங்கம், வெள்ளி மற்றும் செப்பு பொருட்களுக்காக மேலை சாளுக்கியம் (இப்போதைய கர்நாடகா)  என்கிற நாட்டோடு  இராஜராஜ சோழன் போர் புரிய வேண்டியதாயிற்று. அப்போரில் துங்கபத்திரா நதிக்கரையில் ஏழு லட்டம் படை வீரர்களுடன் இராஜராஜ சோழன் அணி வகுத்திருந்த போது முதல் வீரனாக ஆற்றில் இறங்கி போர் புரியச் சென்றது சாட்சாத் இராஜராஜ சோழன்தான்.


ஹைலைட்ஸ்

  • கோபுரத்தை சுற்றி மண்பாதை  அமைப்பதற்காக கொட்டப்பட்ட மண்ணின் அளவு 3 லட்சம் கூடையாகும். (ஒரு கூடை = 22 கிலோ). தேவைப்பட்ட மண் ஆறுகள், ஏரிகள், குளங்களிலிருந்து எடுக்கப் பட்டன. தேவைக்கான மண்ணும் கிடைத்தது. அதே சமயம் நீர் நிலையங்களும் ஆழமாகின.

  • கோபுர உச்சியில் வைக்கப்பட்டிருக்கும் கல் (விமானம்) ஒரே கல்லினால் ஆனது அல்ல. கீழேயே இரண்டு துண்டுகளாக செய்து மேலே கொண்டு செல்லப்பட்டு மறுபடியும் ஒட்ட வைக்கப்பட்டது.  இந்த விமானத்தின் மொத்த எடை 81 டன்களாகும்.

  • கோபுரம்  14 நிலைகள் உடையது.  கோபுரத்தின் மொத்த உயரம் 216 அடி.

  •  ஒவ்வொரு கோபுர மூலையிலும் நந்திகள் அமைக்கப்பெற்றுள்ளது. கோபுர மூலைகளில் வைக்கப்பட்டுள்ள  நந்தி 6.5 x  5.5 அடி அளவுகள் உடையது.

  • இதன் வாசலில் இருக்கும் நந்தியின் எடை 27 டன்களாகும்.

  • கோபுர கீழ்தளத்தின் மொத்த சுற்றளவில் 14ல் ஒரு பங்கானது மேல் நிலையில் உள்ள கோபுர தளத்தின் உட்பக்க சுற்றளவும் சமமாகும்.

  • இந்த கோவில் மண்டபத்தில் கர்ணம் எனப்படும்  நடனச்சிற்பங்களுக்கு மாடல் யார் தெரியுமா? இராஜராஜ சோழனின் மனைவி பஞ்சவன் மாதேவிதான்

- நன்றி  திரு பா. சுப்ரமணியம் & பில்டர்ஸ் லைன்

- பா. சுப்ரமணியம் எழுதி   ”பில்டர்ஸ் லைன்” பத்திரிக்கையில் வெளிவந்த ’ஆர்க்கிடெக்ட் அதியசங்கள்’ எனும் தொடரில் இருந்து டைப்பியது